பாடல் எண் :3679

ர்வநிறை பெருஞ்சுற்ற மகமலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன் பருவமுறைப் பாராட்டுச்
சீர்பெருகச் செய்யவளர் திருமகனார் சீறடியிற்
றார்வளர்கிண் கிணியசையத் தளர்நடையின் பதஞ்சார்ந்தார்.
20
(இ-ள்) ஆர்வ....அளித்து - பெருவிருப்புடைய பெருஞ் சுற்றத்தார்களெல்லாம் மனமகிழக் கொடுத்து; அவர் தாம்....செய்ய - அந் நாயனார், உலகத்திற் பெருகும் மகிழ்ச்சியுடனே அவ்வப் பருவங்கடோறும் செய்யப் பெறும் சடங்குகளை எல்லாம் சிறப்புப் பெருகச் செய்ய; வளர்....சார்ந்தார் - வளரும் திருமகனாராகிய சீராள தேவர் தமது சிறிய திருப்பாதங்களில் மாலையாகக் கோத்த கிங்கிணிச் சதங்கை அசையும்படி தளர்நடைப் பருவத்தினைச் சார்ந்தனர்.
(வி-ரை) ஆர்வநிறை....அளித்து - சுற்றத்தார்க்கு மிகச் சிறப்புடன் வரிசைகள் தந்து; இஃது இம்மகிழ்ச்சி சடங்குகளும் ஒன்று; அடியார்க்கு நிதியளித்தலைச் சிறப்பும் பயனும் பற்றி முன்னர்க் கூறினார்.
பார்பெருகு மகிழ்ச்சி - உலகில் உள்ளார்களும் பெருமகிழ்ச்சி கொள்ளுதல் ஈகைத் திறத்தினாலாவது.
பருவமுறைப் பாராட்டு - செங்கீரைப் பருவ முதலாக வகுத்துச் சொல்லப்பட்ட பிள்ளைப் பருவங்களிற் செய்யும் சிறப்புக்கள்; ஆளுடைய பிள்ளையார் புராணம் பார்க்க. சீர் - இவை சந்தி மிதிப்பித்தல் - அன்னமூட்டுதல் முதலியவை என்பாருமுண்டு.
கிண்கிணி - சதங்கை; ஒலிக் குறிப்புப் பெயர், இங்குக் கூறியது திருவடியிற் சாத்தும் அணி.
தளர் நடையின் பதம் - ஓராண்டு நிறைவு அணையும் பருவம்.
தார்வளர் - தார்போல என்றலுமாம்.