சுருளுமயிர் நுதற்சுட்டி துணைக்காதின் மணிக்குதம்பை மருவுதிருக் கண்டநாண் மார்பினிலைம் படைகையிற் பொருவில்வயி ரச்சரிகள் பொன்னரைஞாண் புனைசதங்கை தெருவிலொளி விளங்கவளர் திருவிளையாட் டினிலமர்ந்தார். | 21 | (இ-ள்) வெளிப்படை. சுருளுடைய மயிர் நிறைந்த நெற்றியிலே சுட்டியும், இரண்டு காதுகளிலும் குதம்பைக் காதணிகளும், திருக்கழுத்திற் பொருந்தும் கண்ட சரமும், மார்பில் ஐம்படைத் தாலியும், கைகளில் ஒப்பற்ற வயிரத்தாலாகிய சரிகளும், (இடையில்) பொன்னரை ஞாணும், திருவடியிற் பூணுகின்ற சதங்கையும் ஆகிய இவற்றைப் பூண்டு தெருவிலே ஒளிவிளங்க வளரும் பிள்ளைத் திருவிளையாட்டிலே விரும்பியிருந்தனர் (சீராள தேவர்). (வி-ரை) இத்திருப்பாட்டினாலே சீராளதேவரைப் பிள்ளைப் பருவத்தே அணி செய்த திருக்கோலம் கேசாதிபாதம் கூறப்பட்டது. திருவுரு அணிசெய் தரிசனம். சுருளுமயிர் நுதல் - மயிர் சுருண்டிருத்தலும், நெற்றியிற் சுருண்டு வீழ்தலும் உடல் அழகிலக்கணங்கள் என்பர். குதம்பை - காது வளர்ச்சிக் கிடும் காதணி என்பர்; ஈண்டு (மணி - அழகு;) அழகிய காதணி என்ற அளவில் பொருள் தந்து நின்றது; மணி - இரத்தினமுமாம். திருக்கண்ட நாண் - திருக்கண்டத்தில் - நாண் என்க. நாண் - பொற்சரம். ஐம்படை - 150 - வது பாட்டுப் பார்க்க. திருமாலின் சங்கு சக்கரம் வாள் தண்டு வில் என்ற ஐந்து படைகள் பொலியப் பொன் முதலியவற்றாற் செய்யப்படுவது; இது காவல் செய்யும் என்பது மரபு. சரி - கைவளை; தோளில் அணிவதுமுண்டு. சுட்டி முதலாகச் சதங்கை யீறாகக் கூறப்பட்ட இந்த அணிகலங்களையெல்லாம் பூட்டப்பெற்று என்க. அமர்தல் - விரும்பிச் செய்தல். |
|
|