பாடல் எண் :3681

வந்துவளர் மூவாண்டின் மயிர்வினைமங் கலஞ்செய்து
தந்தையா ரும்பயந்த தாயாருந் தனிச்சிறுவர்
சிந்தைமலர் சொற்றெளிவிற் செழுங்கலைகள் பயிலத்தம்
பந்தமற வந்தவரைப் பள்ளியினி லிருத்தினார்.
22
(இ-ள்) வந்து....செய்து - முறைமையிற் வந்து வளர்ச்சி பெறும் மூன்றாண்டிலே மயிர் நீக்கு மணவினை என்னும் மங்கலச் சடங்கினைச் செய்வித்து; தந்தையாரும்....இருத்தினார் - தந்தையாரும் ஈன்றெடுத்த தாயாரும் தமது ஒப்பற்ற சிறிய தோன்றலாராகிய மகனாருக்கு மனம் மலர்தற்கேதுவாகிய சொற்களின் தெளிவினையுடைய செழுங்கலைகளைப் பயில்வதற்காகத், தமது பிறவிப் பந்தம் நீங்க வந்த அவரைப் பள்ளியினில் அமர்த்தினார்.
(வி-ரை) தந்தையாரும் - தாயாரும் - செய்து - வந்தவரைப் பயில இருத்தினார் என்று கூட்டுக.
மூவாண்டின்....செய்து- "மயிர் நீக்கும் மணவினை" (1285) என இது சவுளக் கல்யாணம் எனப்படும் சிறப்புடையது என்பார் மயிர்வினை மங்கலம் என்றார். இது மூன்றாண்டிற் செய்யப்பெறுவது; செய்து - செய்வித்து.
சிந்தை....கலைகள் - சிந்தை மலர் - மனத்தை மலரச் செய்யும்; மலர் - மலர்த்தும் எனப் பிறவினைப் பொருள் கொள்க, "புலன் கொளுவ மனமுகிழ்த்த கருணீக்கி மலர்விக்கும் கலைபயில" (1285) என்றது காண்க. சொற்றெளிவு - கருவி; சிந்தை மலர்தல் - பயன்; கலை - சாதனம்.
செழுங்கலைகள் - பலவேறு கலைஞானங்கள். தம் பந்தம் அற வந்தவர் - தம் பொருட்டானன்றித், தம்மை ஈன்ற இருவரது பந்தமும் அது காரணமாக வரும் பிறவியும் அறும்பொருட்டே அவதரித்தவர் என்பதாம்; மகன் என்னும் உலகப் பற்றை அறுத்தற்கு நிலைக்களமாய் வந்த இவர் அதன்மூலமே ஈன்றோர் பிறவியறுக்க ஏதுவாயினமை சரித விளைவாம். "என்றும் பிரியாதே யிறைஞ்சி யிருக்கும்" நிலை (3746) பெறுதற் கேதுவாயினார் என்பது.
வந்துவிளை - பந்தமறப்பிறந்தவரை - பள்ளியினில் அமர்த்தினார் - என்பனவும் பாடங்கள்.