அந்நாளிற் சண்பைநக ராண்டகையா ரெழுந்தருள முன்னாக வெதிர்கொண்டு கொடுபுகுந்து முந்நூல்சேர் பொன்மார்பிற் சிறுத்தொண்டர் புகலிகா வலனார் தந் நன்னாமச் சேவடிகள் போற்றிசைத்து நலஞ்சிறந்தார். | 23 | (இ-ள்) அந்நாளில்....எழுந்தருள - அந்நாளில் சீகாழி ஆண்டகையா ராகிய ஆளுடைய பிள்ளையார் அங்கு எழுந்தருள; முந்நூல் சேர்....சிறுத்தொண்டர் - முப்புரி நூலணிந்த பொன்பூண்ட மார்பினையுடைய சிறுத்தொண்டர்; முன்னாக....புகுந்து - முன்னாகச் சென்று எதிர்கொண்டு அழைத்துக்கொண்டு வந்து நகரினுட் புக்குத் தம் மனையில் எழுந்தருளுவித்து; புகலிகாவலனார்தம்....நலஞ் சிறந்தார் - சீகாழித் தலைவரது நல்ல பெருமையுடைய திருவடிகளைத் துதித்து நன்மை சிறக்கப் பெற்றார். (வி-ரை) அந்நாளில்....கொடுபுகுந்து....போற்றிசைத்து - இவ்வரலாற்றினை ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள் தகுதியும் சிறப்பும் பற்றி விரிவாக (2366 - 2369) உரைத்தருளியமையால் ஈண்டுச் சுருக்கிக் கூறினார்; ஆண்டுக் கண்டு கொள்க. ஆண்டகையார் - பெரு வீரராகிய இந் நாயனாரைத் தொண்டாகக் கொண்டுடைய பேராற்றல் ஆண்டகைமை எனப்பட்டது. முந்நூல்சேர் பொன்மார்பில் - என்றதனால் இவர் மரபுக்குப் பூணூல் அணியும் உரிமை உண்டு என்பது பெறப்படும்; முன் (3661) உரைத்தவை பார்க்க. போற்றிசைத்து நலஞ் சிறந்தார் - தமது திருமனையில் எழுந்தருளிவித்து உபசரித்தனர். "போந்து மாமாத்திரர்தம்....திருமனையிற் புகுந்து....மாதவரவர் தாம் மகிழ்ந்தருள வமர்ந்தருளி" (2369) என்றது காண்க. நலம் சிறத்தலாவது உபசரித்த அந் நன்மையில் விளங்குதல். |
|
|