சண்பையர்தம் பெருமானுந் தாங்கரிய பெருங்காதற் பண்புடைய சிறுத்தொண்ட ருடன்பயின்று மற்றவரை மண்பரவுந் திருப்பதிகத் தினில்வைத்துச் சிறப்பித்து நண்பருளி யெழுந்தருளத் தாமினிது நயப்புற்றார். | 24 | (இ-ள்) சண்பையர் தம் பெருமானும்....பயின்று - சீகாழியர்களது தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் தாங்குதற் கரிதாய் மேன்மேலும் ஓங்கிவளரும் பெரிய காதற் பண்பினையுடைய சிறுத்தொண்டருடன் பயின்று இனிதமர்ந்தருளி; மற்றவரை....சிறப்பித்து - அவரை உலகம் போற்றும் திருப்பதிகத்திலே பாராட்டி வைத்தருளிச் சிறப்புச் செய்து; நண்பருளி எழுந்தருள - தமது நண்பராகும் பேற்றினையும் அவருக்குத் தந்தருளி எழுந்தருள; தாம் இனிது நயப்புற்றார் - தாம் இன்பத்துடனே பெருவிருப்பமும் பொருந்த அமர்ந்தருளினார். (வி-ரை) தாங்கரிய பெருங்காதற் பண்பு - முன் 3671 - 3672 - 3673 பாட்டுக்களில் சிவன் அடியார்கள்பால் இவர்கொண்ட பெறுங்காதலின் உறைப்பு உரைக்கப்பட்டது; சிவன் கழலில் அன்பு" பள்ளமடை யாயென்றும் பயின்று வரும் பண்பும்" முன் (3663) உரைக்கப்பட்டது; பிள்ளையார் வருகை கேட்டு எதிர்கொண்டு வரவேற்று அழைத்து வந்த பண்பு முன் "பெருகியஞா னம் பெற்ற பிள்ளையா ரெழுந்தருளும் பெருமை கேட்டுத்,. திருமருவு செங்காட்டங் குடிநின்றுஞ் சிறுத்தொண்ட ரோடிச் சென்றங், குருகுமனங் களிசிறப்ப எதிர் கொண்டு தம்பதியுட் கொண்டு புக்கார்" (2366) என்பதாதியாக உரைக்கப்பட்டதும் காண்க. உடன் பயின்று - இஃது அணைந்தோர் தன்மை குறித்தது. "அன்பரொடு மரீஇ" (போதம்.12). மண்பரவும் - மண் - மண்ணுலகத்தவர்; புண்ணியப் பேற்றினால் இப் புவனியில் வந்து பிறந்து சிவநெறிவந்தொழுகுவோர்களே இத்திருப்பதிகங்களைப் பரவி உய்யும் திறத்தவ ராவர் என்பது; ஏனை விண்ணவரும் பிறரும் அறிந்து பரவும் ஆற்றலிலர்; மண் - அதில் வாழும் நன்மக்களுக்கு வந்தது - ஆகுபெயர். பரவும் - போற்றும்; போற்றியுய்யும். திருப்பதிகத்தினில் வைத்து - இது பெரும்பேறு. பிள்ளையாரது திருவாக்கினில் வரும் பேற்றினாலே தாவரங்களாகிய பனைகளும் பிறவி நீங்கி வீடு பெறுவன; எலும்பும் பெண்ணாகுவது என்பனவாதி எண்ணிறந்த அருளிப்பாடுகளை இங்கு நினைவு கூர்க. "பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க் கருள்செய்யும் பொருட்டாகக், கடிநகராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே" "சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய, பேராளன்" என்பன வாதியாக வரும் திருப்பதிகங்கள் காண்க. இறைவர், இனி வயிரவராய் வெளிவந்து இவர்க்குச் செய்ய நின்ற பேரருளும் அச்சரித நிகழ்ச்சியில் வெளிப்படக் காணும் சீராள தேவரது சிறப்பும் திருவருட் குறிப்பினால் இத்திருப்பதிகங்களுள் முற்குறிப்பாகப் பெறப்பட வைத்தருளிய திறமும் கண்டு கொள்க. நண்பருளி - தமது நண்பர் என்னப்படும் பெருமையை அவர்க்கு அருளிச் செய்து - ஈந்து; இத்திறத்தினை நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியுள் வைத்து "விரும்பும் புதல்வனை மெய்யறிந் தாக்கிய வின்னமிர்தம், அரும்பும் புனற்சடை யாயுண் டருளென் றடிபணிந்த, இரும்பின் சுடர்க்களிற் றான்சிறுத் தொண்டனை யேத்துதிரேற், சுரும்பின் மலர்த்தமி ழாகரன்பாகத் தொடர் வெளிதே" - (72) என்று போற்றிய திறமும் காண்க."உணர்ச்சி தான் நட்பாங் கிழமை தரும்" (குறள்). தமது திருவடிக்கடியாராய் ஒழுகிய சிறுத்தொண்டருக்கு "நண்பர்" என்ற பெருமை ஈந்தருளியது எந்தம் பரமசாரியரது பெருங்கருணைத் திறம். இனிது நயப்புற்றார் - பிள்ளையாரது திறங்களை எப்போதும் எண்ணி விரும்பி யின்புற்று இருந்தனர். திமருக னகரில் மீண்டும் சென்று பிள்ளையாரைப் பணிந்தழைத்ததுவும் (2382 - 2385), திருப்புகலூரில் மீண்டும் சென்று அவர் திருவடிகளைப் பணிந்து உடனுறைத்து "திருத் தொண்டினுண் மைத்திறந் தன்னையே தெளிய நாடி" (2421) யிருந்ததும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. இவை முன் விரிக்கப்பட்டமையின் இவ்வாறு சுருங்கக் குறித்தருளினர். |
|
|