பாடல் எண் :3684

இத்தன்மை நிகழுநா ளிவர்திருத்தொண் டிருங்கயிலை
அத்தர்திரு வடியிணைக்கீழ்ச் சென்றணைய வவருடைய
மெய்த்தன்மை யன்புநுகர்ந் தருளுதற்கு விடையவர்தாஞ்
சித்தநிகழ் வயிரவராய்த் திருமலைநின் றணைகின்றார்,
25
(இ-ள்) இத்தன்மை....அணைய - இத்தன்மையில் நிகழும் இவரது திருத்தொண்டு பெரிய கயிலை மலையில் எழுந்தருளிய இறைவரது திருவடியிணைகளின் கீழே சென்று அணைய; விடையவர்தாம் - இடபத்தையுடைய அவ்விறைவர் தாமே; அவருடைய....அருளுதற்கு - அவருடைய மெய்யாந்தன்மையினையுடைய அன்பினை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு; சித்தமகிழ்....அணைகின்றார் - மனமகிழ்வுடைய வயிரவத் திருக்கோலத்துடனே திருமலையினின்றும் எழுந்தருளி அணைவாராகி,
(வி-ரை) திருத்தொண்டு....அணைய - என்றது திருவடிக்கேற்ப முற்றி விளைய என்றதாம்; திருவடியின் வியாபக நிறைவுக்குள்ளாகச் செறிய.
மெய்த்தன்மை அன்பு நுகர்ந்து அருளுதற்கு - மெய்த் தன்மை - என்றும் எவ்விடத்தும் எதனாலும் மாறாத ஒருபடித்தாகிய சத்தாம் தன்மை; அன்பு நுகர்ந்து - அன்பினுக்குள்ளே தாம் விரும்பி எழுந்தருளியிருந்து; "அன்பே சிவமாவது", "அன்பே சிவமாய்" (திருமந்). அருளுதல் - அருள்புரிதல்;
திருமலை - திருக்கயிலைமலை; திருமலைச் சருக்கம் பார்க்க.
சித்தநிகழ் வயிரவராய் - சித்த நிகழ்தலாவது அருள் புரியத் திருவுளங்கொள்ளுதல்; வயிரவர் - வயிரவம் என்னும் அகச் சமயத்தின் கொள்கை பூண்ட சங்கமர்;மாவிரதம், கபாலம், வைரவம் முதலியவை காண்க. வயிரவ சங்கமர் என்னாமுது வயிரவர் என்றே கூறியது அடியவரை ஆண்டானாகவே கூறும் வழக்குப் பற்றியும், இங்கு உண்மை பற்றியும் வந்தது; சித்தநிகழ் - அடியவர் சித்தத்தே சிந்திக்க நிகழும் என்றலுமாம்.