மடல்கொண்ட மணியிதழி நெடுஞ்சடையை வனப்பெய்தக் கடல்மண்டி முகந்தெழுந்த காளமே கச்சுருள்போற் றொடர்பங்கி சுருண்டிருண்டு தூறிநெறித் தசைந்துசெறி படர் துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமா கப்பரப்பி, | 26 | (இ-ள்) மடல்கொண்ட....சடையை - இதழ்கள் பொருந்திய கொன்றை மலர்களைச் சூடிய நீண்ட சடையினையே; கடல் மண்டி....சுருள்போல் - கருங்கடலிற் கூடி நீரினை மொண்டு மேலெழுந்த கருமேகத்தினது சுருள்போல்; தொடர்பங்கி....கொந்தளமாக - தொடர்ந்து நீண்ட தலைமயிர் சுருண்டு காடடர்ந்து நெறிப்பும் அசைவும் உடையதாய்ச் செறிந்து படரும் வரிசையுடைய கருங்குஞ்சிக் கொத்துப்போல (ஆக்கி); வனப்பெய்த - அழகுபட; பரப்பி முடித்து, (வி-ரை) சடையைக், காளமேகச் சுருள்போல், பங்கி - கருங்குஞ்சி - கொந்தளமாகப் பரப்பி எனக் கூட்டுக; இறைவர் தமது சிவந்த நீண்ட சடையினையே கருமேகச் சுருள்போல ஆக்கி, அதனையே கரிய நீண்ட செறிந்த தலைமயிராக வரிசை பெற்ற கொத்தாகப் பரப்பி முடித்து என்க. ஏகாரமும் ஆக்கச் சொல்லும் தொக்கன. ஈண்டு, இது முதல் திருவடிக்காட்சி வருமளவும் கூறும் திருக்கோலங்கள் எல்லாம் இறைவர் தமது உண்மைத் திருக்கோலத்தாலேயே, அந்தந்த அங்கங்களில் பூணும் பொருள்களையே கொண்டு, எழுந்தருளினர் எனவும், ஆனால் அவற்றை உலகர் அறியா வகையில் வயிரவச் சங்கமத் திருவேடத்திற் கேற்றவாறு மாற்றியமைத்துக் கொண்டு வந்தருளினர் எனவும் காரணங்காட்டும் அழகு கண்டு களிக்க. இதழி - கொன்றை; இதழி நெடுஞ்சடையை கொன்றை சூடிய நீண்ட சிவந்த சடையினையே; பிரிநிலை ஏகாரம் விரிக்க; இவ்வாறே மேல் வருவனவற்றிலும் கொள்க. கடல்.....போல் - மண்டுதல் - உண்ணுதல்; காளமேகம் - கரியமேகம்;கருமையைச் சிவப்பாக்கி; பங்கி....குஞ்சி. நீண்ட சடையினையே நீண்ட பங்கிக் கருங்குஞ்சியாக்கிப் பரப்பி என்க; குஞ்சி - ஆண் மக்கள் தலைமயிர்; பங்கி - (சுருள்) மயிர்; சுருண்டு - இருண்டு - தூறி - நெறித்து -அசைந்து - செறி - சுருண்டிருத்தல் - கருத்தல் - தூறுபோலக் காடடர்ந்திருத்தல்; கருமணலின் அலைகளைப்போல நெறித்தல், அசைவுடைத்தாதல், அடர்ந்திருத்தல் என்ற இவை பங்கியின் அழகிய இயல்பும் காட்சியுமாம். படர்துஞ்சின் - படர்ந்த வரிசைகளின் நிலையினையுடைய; மேல் “துஞ்சினுனி" (3686) என்பதும் காண்க. கொந்தளம் - கொத்து. கேசாதிபாதம் என்பதற் கேற்பக் கேசத்தை முதலிற் கூறி எடுத்தருளினார். அடர்துஞ்சின் - என்பதும் பாடம். |
|
|