அஞ்சனமஞ் சனஞ்செய்த தனையவணி கிளர்பம்பை மஞ்சினிடை யிடையெழுந்த வானமீன் பரப்பென்ன புஞ்சநிறை வண்டுதேன் சுரும்புபுடை பரந்தார்ப்பத் துஞ்சினுனித் தனிப்பரப்புந் தும்பைநறு மலர்தோன்ற, | 27 | (இ-ள்) அஞ்சனம்....பம்பை - மைக்குழம்பை முழுக்குச் செய்தது போல அழகுமிகும் கருமயிராகிய மஞ்சினிட....பரப்பென்ன - மேகத்தினிடையிடையே எழுந்து தோன்றும் விண்மீன்களின் பரப்புப்போல; புஞ்சநிறை....ஆர்ப்ப - திரட்சியாக வரிசையாய்ப் பலவகை வண்டின் கூட்டங்கள் பக்கங்களிற் சூழ்ந்து ஒலிக்க; துஞ்சின் நுனி - நிலைபெறும் வரிசைகளின் விளிம்பிலே தனி....தோன்ற - தனித்தனி பரப்பிய மணமுடைய தும்பை மலர்கள் விளங்க, (வி-ரை) மஞ்சினிடையிடை எழுந்த - வான மீன் பரப்பென்ன- பம்பை - துஞ்சின் நுனிப் பரப்பும் - தும்பைமலர் தோன்ற என்று கூட்டுக. தும்பை மலர் - வானமீன் போலத் தோன்ற என்பது மெய்யும் வினையும் பற்றி எழுந்த உவமம். பம்பை மஞ்சி னிடையினை - பம்பை - சுருண்ட விரித்த மயிர். முன்"காள மேகச்சுருள்போல்" (3685) என்றதனைத் தொடர்ந்து கொண்டவாறு; பம்பை மேகமாக, அம்மேகத்தின் இடைவெளியில் தோன்றும் விண்மீன்கள்போல் தும்பை மலர்கள் விளங்கின. மஞ்சு - மேகம்; இங்குக் கருமேகம் குறித்தது. புஞ்சம் - திரட்சி; வண்டு - தேன் - சுரும்பு - கருவண்டும் தேன்வண்டும் பொறிவண்டும் என வண்டுகளின் வகை; வண்டுகள் கூட்டமாக மொய்க்கும் நிலை குறித்தபடி. தும்பை நறுமலர் - தும்பை இறைவர்க் குகந்த மலர்களுள் ஒன்று; நறிய - என்றதனால் புதுமையும் தேனுடைமையும் பெறப்படும். |
|
|