அருகுதிரு முடிச்செருகு மந்தியிளம் பிறைதன்னைப் பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச்சாத் தியதென்ன விரிசுடர்ச்செம் பவளவொளி வெயில்விரிக்கும் விளங்குசுடர்த் திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க, | 28 | (இ-ள்) அருகு....என்னை - திருமுடியின் ஒருபக்கத்திற் செருகும் அந்தி மாலையில் காணும் இளம்பிறையினையே ஒளிபெருகும் சிறிய முழுமதி போல ஆக்கி மீண்டும் (நெற்றியிலே) தரித்தது போல; விரிசுடர்....திருநுதல் மேல் - விரியும் ஒளி பொருந்திய செம்பவளச் சோதியின் கதிர்களை விரித்து வீசும் விளக்கமுடைய சுடர்த்திருநெற்றியின் மேலே; திருநீற்று....இலங்க - திரு நீற்றின் ஒற்றைப் பொட்டு ஒளிவீசி விளங்க, (வி-ரை) அருகு - நெற்றியின் அருகு; பிறை தன்னை மதியாக்கிச் சாத்திய தென்னத் - திருநீற்றுப் பொட்டு - இலங்க - பிறையினையே சிறிய முழுமதியாக்கிச் சாத்தியது போல விளங்கிற்று வெள்ளிய திருநீற்றுத் தனிப் பொட்டு என்பது. பெருகு சிறு - முரண் அணி. பெருகு சிறுமதி ஆக்கி - இளம்பிறையினையே நிறைமதியாக்கியதனால் சிறுமதி யாயிற்று என்பது குறிப்பு. சிறிய வடிவுடைய நிறைமதி. பெருகு - வளரும். பெயர்த்து - நெற்றி அருகில் முடிவில் இருந்ததனை இடம் பெயர்த்து நெற்றியிற் சாத்தியது போல: திரும்பவும். விரிசுடர்....நுதல் - ஒளி வீசும் செவ்விய நிறமுடைய திருநெற்றி; வெயில் - ஒளி; பவளவொளி - திருமேனியின் செவ்வொளி; திருநீற்றுத் தனிப்பொட்டு - வயிரவ சமயிகள் திருநீற்றினை நெற்றி விரவ முழுமையும் பூசாது பெரிதாய் ஒற்றை நீற்றுப் பொட்டு மட்டும் வைப்பர்; தனிப்பொட்டு - ஒப்பற்ற பொட்டுமாம்; திருநீற்றுப் பொட்டின் விளக்கத்துக்கு மதியை உவமித்தது பற்றித் "தோற்று மன்னுயிர்கட்கெலாந் தூய்மையே, சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோய், ஆற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண், ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா' (308); "திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த போதி, லிரண்டு நில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோல்" (1498) என்றனவும், பிறவும் காண்க. |
|
|