களங்கொள்விட மறைத்தருளக் கடலமுதக் குமிழிநிரைத் துளங்கொளிவெண் டிரட்கோவைத் தூயவட மணிந்ததென உளங்கொள்பவர் கரைந்துடலு முயிருமுரு கப்பெருக விளங்குதிருக் கழும்தினிடை வெண்பளிங்கின் வடந்திகழ, | 30 | (இ-ள்) களங்கொள் விடம்....அணிந்ததென - திருக்கண்டத்தில் கொண்ட விடத்தினை மறைத்தருளும் பொருட்டுப் பாற்கடலில் எழுந்த அமுதத்தின் குமிழ்களின் வரிசையாகிய வாய்ந்த ஒளியினையுடைய வெள்ளிய திரட்சிகளின் தூயவடத்தினை அணிந்தாற்போல; உளங்கொள்பவர்....உருக - மனத்தினுள்ளே சிந்திப்பவர்களுடைய உடலும் உயிரும் உருகும்படி; பெருக....வடந்திகழ - மிக விளங்குகின்ற திருக்கழுத்திலே வெள்ளிய பளிங்குமாலை விளங்க. (வி-ரை) களம் கொள்விடம் - ஏற்றுக்கொண்டு கழுத்திலே வைத்தருளிய விடம். மறைத்தருள - தாமாந்தன்மை அறிய வாராதவாறு கழுத்தின் விடத்தினை மறைத்தல் வேண்டப்பட்டது என்பது; நிருநீலகண்டம் - சிவனுக்குரிய சிறப்பு. விடம் மறைத்தருளஅமுதக் குமிழிநிரை - விடத்தின் தன்மை போக்க அமுதம் வைத்து என்ற நயமும் காண்க; அமுதமே விடத்தினை மறைக்கவல்லது என்பது. அமுதம் வெண்மை நிறமாதலின் கரிய விடத்தினை மறைக்கும் என்றதுமாம். களம் - கயரி என்ற குறிப்புமுடையது; கடல் - பாற்கடல்; நிரை - நிரையாகிய; துளங்கு ஒலி - விண்மீன் போல விட்டிமைக்கும் ஒளி. உளங்கொள்பவர - மனத்தில் வைத்துத் தியானிப்பவர்; கரைந்து - அன்பினால் நெக்குருகி. பளிங்கின் வடம் - பெரும்பளிங்கு மணிகளாலாகிய கழுத்து வடம் கழுத்தில் உள்ள விடத்தினை மறைக்க அமுதக் குமிழிகளின் வரிசைக் கோவை போல விளங்க என்பது உவமை; உருவம் பற்றி வந்த உவமை. தற்குறிப்பேற்றமும் காண்க. பெருக - பெருகும்படி; பெரிதும். |
|
|