செம்பரிதி கடலளித்த செக்கரொளி யினையந்திப் பம்புமிருள் செறிபொழுது படர்ந்தணைந்து சூழ்வதெனத் தம்பைழய கரியுரிவை கொண்டுசமைத் ததுசாத்தும் அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தி னணிவிளங்க, | 31 | (இ-ள்) செம்பரிதி.......ஒளியினை - சிவந்த சூரியன் கடலிற் குளிக்கும்போது தரும் செவ்வான ஒளியினை; அந்தி....சூழ்வதென - அந்தி முதிர வரும் இருளடர்ந்த இராப்போது படர்ந்து வந்து சூழ்வது போல; அம்பவளத்திரு மேனி - அழகிய பவளம்போன்ற திருமேனியின் மேல்; தம் பழைய....சாத்தும் - தமது பழய யானைத்தோற் போர்வையினையே கொண்டு ஆக்கியதனையே சாத்தும்; கஞ்சுகத்தின் அணிவிளங்க - சட்டையினது அழகு விளங்க, (வி-ரை) செக்கர் ஒளியினை - இருள் செறிபொழுது - சூழ்வது எனப் பவளத் திருமேனியிற் - கரியுரிவைக் கஞ்சுகம் - விளங்க என்பது உவமை. உருவுபற்றி வந்தது. "சினப்பரி யழல்மீது போர்த்திடும் அஞ்சனப்புகை" (கந்தபு). செக்கர் ஒளி - செவ்வான ஒளி; செம்பரிதி கடல் அளித்த என்பது மாலையிற் கடலில் விழும்போது சூரியன் சிவந்து விளங்குதலும், அவன்கடலில் விழுதலாற் பரப்ப வருவது செவ்வான வொளியாதலும் குறித்தது. இருள் செறி பொழுது - இருண்ட இரவுக் காலம்; செவ்வானத்தை இருள் இரவு சூழ்ந்து மறைப்பது போலக் கரிய கஞ்சுகம் செம்மேனியை மறைக்க என்றார். பொழுது - இரவு; காலக்கூறு; பெயர்; படர்தல் - வருதலும் விரித்தலும்மாம்; சூழ்தல் - சுற்றி மறைத்தல். பழைய கரி உரிவை கொண்டு சமைத்தது - கஞ்சுகம் - பழைய கரிய யானைத் தோலினையே கரிய கஞ்சுகமாக ஆக்கினர் என்பது; கொண்டு - சாதனமாகக் கொண்டு; சமைத்தல் - உளதாக்குதல். "மாமணிக் கஞ்சுகம்"(கந்தபு). கடல் குளித்த - என்பது பாடம். |
|
|