"பொருவிறிருத் தொண்டர்க்குப் புவிமேல்வந் தருள்புரியும் பெருகருளின் றிறங்கண்டு பிரானருளே பேணுவீர்! வருமன்பின் வழிநிற்பீ!" ரெனமறைபூண் டறைவனபோற் றிருவடிமேற் றிருச்சிலம்பு திசைமுழுதுஞ் செலவொலிப்ப, | 33 | (இ-ள்) பொருவில்....கண்டு - ஒப்பற்ற திருத்தொண்டராகிய சிறுத்தொண்டருக்காக இவ்வுலகத்திலே வந்து அருள் புரியும் பெருகிய அருளின் தன்மையைக் கண்டு; பிரானருளே....அறைவனபோல் - இறைவரது திருவருளினையே விரும்பிப் போற்றுவீர்! வளரும் அன்பின் வழியே நிற்கக் கடவீர்! என்று வேதங்கள் பூண்டு சாற்றுவனபோல; திருவடிமேல்....ஒலிப்ப - திருவடியின் மேல் திருச்சிலம்பு எல்லாத் திசையும் செல்லும்படி - ஒலி செய்ய, (வி-ரை) திருவடிமேல் திருச்சிலம்பு ஒலித்தல் "அருளின் திறங்கண்டு பேணுவீர் வழிநிற்பீர்"என மறை அறைவனபோல - என உவமித்தார்; ஒலித்தல் - வினைபற்றி எழுந்த உவமை. திருச்சிலம்பு - வேதமே சிலம்பு; நாதமே சிலம்பு என்பர்; சிலம்புகல் - (ஒலித்தல்) காரணமாகப் போந்த பெயர். "மறைச்சிலம்பு புலம்ப நடஞ் செய்." "பொருவில்....வழிநிற்பீர்!" என - இது மறைகள் அறையும் ஒலியின் பொருள். வந்தருள் புரியும் திறம் - கண்டு - வந்து - திருக்கயிலையினின்றும் புவிமேல் வந்து; கண்டு - நேரே கண்ணாற் கண்டும் சிந்தித்துணர்ந்தும். பேணுவீர்! - பேணுவீர்களே!; வினைப் பெயர்; விளி; கடவீர்! - கடவீராக! அறைவனபோல் சிலம்பு திசை முழுதும் செலஒலிப்ப -"இறைஞ்சுங் கால மிதுவென் றங்கவரை அழைத்தா லென்ன......அடித்தாமரைமேற் சிலம்பொலிப்ப" (3488). திசை முழுதும் செல - எவ்வுலகத்தாரும் அறிந்துய்ய. மறை......அறைவன - மறைகளின் உபதேச உள்ளுறையு மிதுவே யாதலும் காண்க. "ஆரண நூபுரஞ் சிலம்பு மடிகள்." |
|
|