பாடல் எண் :3693

அயன்கபா லந்தரித்த விடத்திருக்கை யாலணைத்த
வணங்கொளிமூ விலைச்சூல மணித்திரூத்தோண் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத் தமருகத்தி னொலிதழைப்பப்
பயன்றவத்தாற் பெறும்புவியும் பாததா மரைசூட,
34
(இ-ள்) அயன்....பொலிய - பிரம கபாலத்தை ஏந்திய இடது திருக்கையினாலே அணைத்த விளங்கும் ஒளியினையுடைய மூவிலைச் சூலமானது அழகிய திருத்தோளின் மேலே விளங்க; தயங்கு....தழைப்ப - மலிந்து - வீசும் ஒளியினை உடைய வலத் திருக் கையிலே பிடித்த தமருகத்தின் ஒலி ஓங்க; பயன்....சூட - முன்னைத் தவத்தினாலே பயன் பெறும் நிலமும் பாத தாமரைகளைத் தாங்க,
(வி-ரை) இத்திருப்பாட்டாற் றிருக்கைக ளிரண்டன் நிலை போற்றப்பட்டது.
அயன்....இடத்திருக்கை - முன்னர்ப் பிரம கபாலத்தைத் தாங்கிய இடது திருக்கை. கை அணைத்த - கையினால் அணைக்கப் பெற்ற; பிறவினை.
அணைத்த சூலம் தோள்மிசைப் பொலிய - என்க. இடது திருக்கையால் அணைக்கப்பெற்ற சூலம் தோள்மேல் சாத்தி விளங்கப்பெற்றது.
வலத்திருக்கை.....தழைப்ப - வலது திருக்கையில் ஏந்திய தமருகத்தின் ஒலி ஓங்கிப் பரவ; தழைப்ப என்றார் "தோற்றம் துடியதனில்"(உண்மை விளக்கம்) என்றபடி துடியின் ஒலியே ஒடுங்கிய உலகம் மீளத் தோன்றித் தழைத்தற்குக் காரணமாயிருக்கும் குறிப்புப் பெறுதற்கு; தமருகம் - உடுக்கை; துடி; "இருதலை யொருநா இயங்க" வரும் ஓர் வகை இயம்; தயங்குசுடர் -விளங்கும் ஒளி; இது வலத்திருக்கையின் விளக்கம்; தமருகத்துக்கும் ஆம். "கடுத்தாடுங் காதலத்திற் றமருகமும்" (நம்பி).
தவத்தாற் பயன்பெறும் புலியும் என்க. இறைவரது இத்திருக்கோலத்திற் பாதங்களைச் சூடி நிற்றற்கு நிலம் முன்னைத் தவம் செய்திருந்தமையால் அதன் பயனாக அப்பேறு பெற்றது. பெறும் - பெறும் வகையினாலே; மண் சுமந்த திருவிளையாடலில் "நிலமகள் தீண்டித் திளைப்பெய்த"என்று கூறும் கருத்தை இங்கு நினைவு கூர்க.