பாடல் எண் :3694

அருள்பொழியுந் திருமுகத்தி லணிமுறுவ னிலவெறிப்ப
மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப
பொருள்பொழியும் பெருகன்பு தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெரூள்பொழிவண் டமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிசேர்ந்தார்.
35
(இ-ள்) அருள்....எறிப்ப - அருள் பொழிகின்ற திருமுகத்திலே அழகிய புன்முறுவலானது நிலவு போன்ற குளிர்ந்த ஒளி வீச; மருள்....வெயிலெறிப்ப - மயக்கம் பெருகச் செய்யும் மும்மலங்களின் வலியினையும் போக்கும் கூரிய சூலம் வெயில் ஒளி வீச; பொருள்....ஏத்த - உண்மைப் பொருளை விளக்கும் பெருகுகின்ற அன்பு மேன்மேலும் தழைத்து ஓங்கி இவ்வுலகம் ஏத்த; தெருள்....சேர்ந்தார் - அறிவு விளக்கம் செய்யும் வளப்பமுடைய தமிழ்நாட்டில் உள்ள திருச்செங்காட்டங் குடியினிற் சேர்ந்தருளினார்,
(வி-ரை) முறுவல் நிலவு - புன்முறுவலாகிய நிலவொளி (சந்திரிகை) வீச; முறுவல் - பல் வரிசையின் தோற்றம் சிறிது வெளிப்படும் நிலை.
மருள் பொழி மும்மலம் - பொழிதல் - மிகுதியாகத் தருதல்; மழைபொழிதல் என்புழிப்போல்; மருள் - மயக்கம்; "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும், மருள்" (குறள்); கன்மமலம் நியதியின் வழியாய் வருவதாயினும் அதன் இச்சை நீங்கிய தீர்வின்போது வீடுபேறு வரவுள்ளதாதலானும், "முன்னமே யான்மா வின்றன் மும்மலத் தொன்ற தாகிக், கன்மமு மூலங் காட்டிக் காமிய மலமாய் நிற்கும்" (சித்தி. 2-39) என்பனவாதலானும் கன்மமும் சிதைக்கப்படுதல் வேண்டும். மாயாமலம் இரவிற் கைவிளக்குப்போல் விளக்கத்தின் பொருட்டு இறைவராற் றரப்படினும், "வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே" (சித்தி. 2-53) என வருதலின் அதுவும் சிதைக்கப்படுதல் வேண்டும்; "ஆன்மா வின்றன் அறிவொடு தொழிலை யார்த்து நின்று.......என்று மஞ்ஞானங்காட்டும் ஆணவம்" (சித்தி. 2-80) ஆதலின் அதனைச் சிதைத்தாலன்றி உயிர் வீடு பெறாது; ஆதலின் மருள் பொழி மும்மலம் சிதைக்கும் என்றார்; "சாருமல மூன்று மற" (803) என்றதும், ஆண்டும், பிறாண்டு முரைத்தவையும் காண்க.
மும்மலம் சிதைக்கும் வடிச்சூலம் - மும்மலங்களையும் சிதைத்தல் மூவிலைச் சூல மேந்திய கருத்து என்பதாம். சூலம் - சிவனது படை - பாசுபதம் - என்ப. சிவமந்திரங்களுள் அஸ்திர மந்திரம் பற்றி வகுக்கப்படும் நிலைகள் எல்லாம் கருதுக.
பொருள் பொழியும் பெருகு அன்பு - பொருள் - உண்மைப் பொருள்; பொழிதல் - தருதல்; உண்மைப் பொருளைப் பெறுதற்குக் காரணமாகி மேன் மேல் பெருகும் அன்பு; அன்பே பொருளெனப்படும் தன்மையினை அடைதற்குக் காரணமாய் நிற்பது. பொருள்.....புவி ஏத்த - இச்சரித விளைவின் பயனாக உலகம் அன்பின் பயனைக் கண்டு எத்தி உண்மைப் பொருளை அடைய முயல்வதாம் என்றபடி; "மக்களே மணந்த தாரம்" என்பவாதியாக வரும் பொருள்களைப் பற்றிக் கொண்டு கழிந்து பிறவியில் வீழும் மாக்கள் மருள்பொழி மும்மலம் சிதைக்கப்பெறுதலாற் பொருள் பொழியும் பெருகன்பு தழைத்தோங்கப் பெறுவர் என்று தொடர்புபெறக் கூறியதும் காண்க. இச்சரிதங் கண்ட அறியா மாக்கள் இதனால் உலகன்புக் கிடையூறாகும் என்று பழிப்பர்; அஃதுண்மை யன்று; இதனால் பொருள் பொழியும் பெருகு அன்பு அழைத்தோங்குதலே சிறந்த பயனாம் என்பதாம். "உருநாட்டும் செயல்காமனொழிய" (366க்) என்று தொடக்கத்துக்கூறிய குறிப்பினையும் காண்க.
தெருள்பொழி வண்டமிழ் - அறிவு மிகக் கொடுக்கும் வள்ளன்மையுடைய தமிழ் என்று தமிழ்ச் சிறப்புக் கூறியவாறு; தெருளாவது - சிவனடிமைத் திறம் பற்றிய அறிவு விளக்கம். "ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்" (970).
தமிழ்நாட்டுச் செங்காட்டங்குடி - "செந்தமி ழோர்கள் பரவி யேத்துஞ் சீர்கொள் செங்காட்டங்குடி" (தேவா. பிள். நட்டபாடை - திருமருகலும், செங்காட்டங்குடியும் - 9) என்ற கருத்துக் காண்க. "உத்தரா பதியுள்ளோம்" (3699); "வடதேசத்தோம" (3702) என்பதனால் வடநாட்டினின்றும் வருவாராய்ப்போந்த இறைவர் தென்றமிழ் நாட்டிற் சேர்ந்தார் என்ற குறிப்பும் காண்க. அன்பும் அதனாற் சிவத்தன்மையும் பெருக நிகழ்வது தமிழ் நாட்டின் சிறப்பாம் என்பது; (46).
இவற்றின் சுருக்கம்: வயிரவக் கோலங்கொண்டு போந்த திறமாவது; தமது சிவந்து நீண்ட சடையினையே மேகம்போல அடர்ந்த கரிய தலைமயிராக்கியது போலக் கருங்குஞ்சி பரப்பி முடித்தனர்; அப்பரப்பினுள் இடையிடைவைத்த தும்பை மலர்கள் அக்கருமேகத்தி னிடையிடை விளங்கும் விண்மீன் போன்றன; முடியிற் செருகிய பிறையினையே சிறு முழுமதியாக்கிச் சாத்தியது போல நெற்றியில் தனித் திருநீற்றுப் பொட்டுத் திகழ்ந்தது; சூரிய மண்டலம், சந்திர மண்டலம், தீ மண்டலம் என்ற மூன்றும் ஒருங்கே அணைந்தது போல இரு காதுகளும் சங்கக் குழையும் அவற்றுட் செறித்த செவ்வரத்த மலரும் தோன்றின; விடமுடைய திருநீலகண்டத்தின் கொடுமையினை மறைக்க அமுதக் குமிழிகளைக் கோவை செய்து கழுத்தில் தரித்தது போல அதிற் பூண்ட வெண்பளிங்கின் வடம் விளங்கிற்று; அத்திருமேனியிற் போர்த்த கரிய கஞ்சுகம் அத்திருமேனியின் அந்திச் செக்கர் ஒளியினை இருட்பொழுது சூழ்வது போன்றிருந்தது; பழைய கரியுரிவைப் போர்வை போலத் தோன்றிற்று அக்கஞ்சுகம்; சன்ன வீரம் - ஆரம் - வடம் - கைச்சரி - அரைச்சரி - காற்கரி இவைகள் அன்பர்களது மிக்கு எழும் அன்பு திருமேனியில் அவ்வவ்விடங்களில் விளைந்தது போல விளங்கின; திருக்காலிற் பூண்ட மறைச்சிலம்பு ஒலித்தல், "பெருமான் திருத்தொண்டர்க்குப் புவிமேல் வந்தருள் புரியு் பெகுகு அருளின் றிறங்கண்டு பேணி அன்பின்வழி நிற்பீராக" என உலகினர்க்கு எடுத்துச் சொல்வனபோன்றது; இடது திருக்கையால் அணைத்த திரிசூலத்தினைத் தோளிற் சார்த்தி விளங்க, வலத்திருக்கையிலே கொண்ட தமருகத்தின் ஒலி தழைத்தது; பாததாமரை நிலம் பொருந்தியது; திருமுகத்தில் முறுவல் நிலவெறித்தது; சூலம் வெயில் வீசிற்று; இது கண்டு புவி ஏத்தத் தமிழ் நாட்டுச் செங்காட்டங்குடியிற் சேர்ந்தருளினார் - என்பதாம்.
இத்திருக்கோலங் காட்டி உலகுய்ய இறைவர் எழுந்தருளி வருதலால், அதனைத் திருமுடி முதல் திருவடி வரை தாம் கண்டு வழிபட்டு நாமும் காணக்காட்டி உய்யச் செய்தல் ஆசிரியரது தெய்வ அருட் கவிநலம். "......இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம்....." "காலமுண் டாகவே காதல்செய் துய்மின்....பிரான்றன் னடியவர்க்கு, மூலபண் டாரம் வழங்குகின் றான்வந்து முந்துமினே" (5) என்ற திருவாசகங்கள் (பாண்டிப்பதிகம்) ஈண்டு நினைவு கூர்தற் பாலன.
இத்திருக்கோலம் இறைவர் தம் மிச்சையாற் பூண்டது. பசுக்களாகிய ஏனைத் தேவர்களும், மக்கள் முதலிய உயிர்களும் கொள்வன போன்று மாயையிற் றோன்றி வரும் உடல்போல்வதன்று.
"குறித்ததொன் றாக மாட்டாக் குறைவில னாத லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பான் மேவுத விலாமை யானும்
நிறுத்திடு நினைந்த மேனி நின்மல னருளி னாலே" (சித்தி.1.65)
என்பதும், (சிவப்பிரகாசம் -15ம்) பார்க்க. திருவிளையாடற் புராணத்துள் இறைவன் மேற்கொண்ட பற்பல திருமேனிகளையும் இவ்வாறே கண்டுகொள்க. இவ்வாறு வருவன அவ்வப் பெருந் தொண்டர்க் கருள்புரிய வெளிப்பட்டுத் தோன்றிவரினும், (அவர் காரணமாக) தவப்பயனாலே அவ்வவ் விடங்களில் அவ்வக்காலத்து நிகழும் ஏனை மக்களும் காண வருவனவாம். "கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவி" (3695) என மேல்வருவது காண்க; ஆயின் இவ்வாறு அவர் திருமேனி புறக் கண்ணாற் காண வரும்போது, அவர் இறைவர் தாமாந் தன்மை அறியவாராது அத்திருக்கோலம் மறைந்த பின்னரே அறிய நிற்பது இதன் தன்மையாதலும் கண்டுகொள்க.