தண்டாத தொருவேட்கைப் பசியுடையார் தமைப்போலக் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து "தொண்டானார்க் கெந்நாளுஞ் சோறளிக்குந் திருத்தொண்டர் வண்டார்பூந் தாராரிம் மனைக்குள்ளா ரோ?"வென்ன, | 36 | (இ-ள்) தண்டாதது........போல - தணியாததாகிய ஒரு பெரும் பசியினையுடையவர் போல; கண்டாரை.....அணைந்து - கண்டார்களை நோக்கிச் சிறுத் தொண்டரது மனையைக் கேட்டறிந்து விரைவில் அங்கு வந்தணைந்து; "தொண்டனார்க்கு....உள்ளாரோ?" என்ன -சிவபெருமானது தொண்டரானார்க்கு எந்நாளிலும், சோறு அளிக்கின்ற திருத்தொண்டராகிய, வண்டுகள் மொய்க்கும் பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டராகிய, பூமாலையினை அணிந்த சிறுத்தொண்டனார் இம்மனைக்கண் உள்ளாரோ? என்று கேட்க, (வி-ரை) தண்டாதது ஒரு வேட்கை - பெரும்பசி; தண்டாத - தணியாத; ஒரு - ஒப்பற்ற; அளவற்ற. போல - பசியில்லாராயினும் பசியுடையார் போல நடித்தனர் என்க. சோறிடுவர் மனை வினவும் தொழில் பற்றி வந்த உவமம். கண்டாரை - தம்மாற் காணப்பட்டார்களை; தம்மைக் கண்டுவினவும் பேறு பெற்றாரை என்றலுமாம். தொண்டானார்க்கு....திருத்தொண்டர்- இவ்வாறு அழைத்துக்கூறுதல் அவரது தன்மையறிந்த நிலையும், சோறு வேட்ட தமது பசியினையும் புலப்படுத்தலாம். இம்மனைக் குள்ளாரோ? - இங்கு மனையில் இருக்கின்றாரோ?என்று வினவிய படி. மனைக்கு - மனையில்; நான்கனுருபு ஏழன்பொருட்டு; உருபு மயக்கம். சோறளிக்குஞ் சிறுத்தொண்டர் - என்பதும் பாடம். |
|
|