"வந்தணைந்து வினவுவார் மாதவரே யா"மென்று சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி "அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார்; எந்தமையா ளுடையவரே! யகத்துளெழுந் தருளு" மென, | 37 | (இ-ள்) வந்தணைந்து.....வணங்கி - வந்து சேர்ந்து கேட்கின்றவர் மாதவராகிய அடியவரே யாவர் என்று உட்கொண்டு சந்தனத்தாதியார் என்ற அம்மையார் முன்னால் வந்து அரவது திருவடிகளை வணங்கி; அந்தமில்....அருளும் என - எல்லையில்லாச் சிறப்பினையுடைய அடியவர்களைத் தேடும் பொருட்டு அவர் புறத்தே சென்றனர்; எம்மையாளுடைய முதல்வரே? அகத்துள்ளே எழுந்தருளுவீராக என்று சொல்ல, (வி-ரை) வந்து....என்று - இது அவர் வினவுதல் கேட்டுத் தாதியார் கொண்ட கருத்து; மாதவர் - அடியார்; தவம் - சிவனடிமைத் திறத்தின்நிலை; சிவவழிபாடு; மாதினை ஒரு கூறுடைய சிவனேயாம் என்ற குறிப்புமாம். சந்தனமாம் தையலார் - சந்தனத்தார் என்னும் பெயருடைய தாதியார். "சந்தனத்தாரெனும் தாதியார்" (3734); முன்வந்து - வெளியிலிருந்து உசாவி வந்தவர்களுக்கு விடை கூறி அறிவிப்பது முதலில் தாதியார் கடமை என்பது. தாள் வணங்கி - அடியாரை வணங்கி விடை கூறும் மரபு. அந்தமில் சீர் அடியாரைத்தேடி - அடியார் பெருமைகளை அக்குடும்பம் அறிந்து ஒழுகிய நிலை புலப்படக் கூறிய திறமும் மரபும் காண்க. எந்தமை ஆளுடையவரே - இஃது அடியார்களிடத்து அவர்கள் பத்தியுடன் ஒழுகும்நிலை காட்டியபடி; இங்கு வந்தவர் இறைவரே என்பதும், அவர் இத்தாதியாரை யுள்ளிட்டு இக்குடும்ப முழுமையும் அன்று ஆட்கொள்ள வந்தவர் என்பதும் உட்குறிப்புப் படத் தாதியார் வாக்கில் அவரை அறியாமலே போந்தவாறும் கண்டுகொள்க. அகத்துள் எழுந்தருளும் - எம் அகம் (மனம்) நீங்காதுறையும் என்ற குறிப்பும் காண்க. மாதவரேயோ வென்று - என்பதும் பாடம். |
|
|