மடவரலை முகநோக்கி "மாதரார் தாமிருந்த இடவகையிற் றனிபுகுதோ" மென்றருள வதுகேட்டு "விடவகல்வார் போலிருந்தா" ரெனவெருவி விரைந்துமனைக் கடனுடைய திருவெண்காட் டம்மைகடைத் தலையெய்தி, | 38 | (இ-ள்) மடவரலை....என்றருள - அவ்வம்மையாரைப் பார்த்துப் "பெண்கள் தாம் தனியே இருந்த இடத்தில் நாம் தனியே புகுத மாட்டோம்" என்று அருளிச்செய்ய; அது கேட்டு.....எய்தி - அதனைக்கேட்டு அவர் அவ்விடம் விட்டுச் சென்று விடுவார்போல இருந்தார் என அஞ்சி விரைந்து மனையின் கடமை முற்றும் உடையவராகிய திருவெண்காட்டு அம்மையார் உள்ளிருந்து மனையின் முன்கடையில் வந்து, (வி-ரை) "மாதரார்....தனிபுகுதோம்" - இஃது சிறப்புடையதோர் உலகியல் நீதி: உலகர் பின்பற்றி ஒழுகத்தக்க பெருநீதியும் நாகரீகத் தன்மையுமாம். தனிபுகுதோம் - நமது அருட்சத்தியாகிய தேவியுடனும் திருமகனாருடனும் பின்னர் வரவுள்ளோம் என்பது குறிப்பு. விட அகல்வார் போலிருந்தார் என வெருவி - விட - அவ்விடத்தை விட்டு நீங்கிவிட; அகல்வார் - வேறிடம் சென்று விடுவார்; வெருவி - அன்று அடியாரைக் காணாது தேடியிருந்த நிலையில் தாமாகவே போந்தவரையும் நழுவவிட நேருமோ என்று அஞ்சி; விரைந்து - விரைவு -இல்லறம் வழுவாதியற்றுதலின் ஆர்வம்; அவர் அகன்று விடும் முன்பே வரும் விரைவுமாம். மனைக்கடனுடைய - இல்லறப் பாரம் முழுமையும் தாமே கடமையாகப் பூண்ட; திருக்குறள் பார்க்க. "மனையறத்தின் வேராகி" (3676). கடைத்தலை எய்தி - முற்றத்தின் முன்வாயிலில்; மனைப்புறம் போகாது இயல்பினாலே மனையினுள் இருந்து ஏவலர் மூலம் மனையின் நிகழ்ச்சிகளைச் செலுத்துவது, உயர்ந்த வாழ்க்கைத் திறமுடைய மனைக்கிழத்தியரது நிலைமை; இங்கு முன் கூறியபடி வெருவுதலால் அதனை நீக்கத் தாமே வெளிப்போந்தனர் என இச்செயலால் அவ்வில்லறத்தினும், அடியார் பணியில் வழுவாவகை வைத்த உறைப்புப் புலப்படுதல் காண்க. மடவரல் - பெண்மை நாற்குணங்களுள் மடமை யுடையவள். |
|
|