பாடல் எண் :3698

"அம்பலவ ரடியாரை யமுதுசெய்விப் பாரிற்றைக்
கெம்பெருமா னியாவரையுங் கண்டிலர்தே டிப்போனார்;
வம்பெனநீ ரெழுந்தருளி வருந்திருவே டங்கண்டாற்
றம்பெரிய பேறென்றே மிகமகிழ்வ; ரினித்தாழார்,
39
(இ-ள்) அமபலவர் அடியாரை.....போனார் - திருவம்பலமுடைய இறைவரடியார்களைத் திருவமுது செய்விக்கும் நியமமுடைய அவர், அந்நியம முடித்தற்கு, எமது பெருமானே! இன்று அடியார் எவரையும் காணாமையால் தேடிச் சென்றார்; வம்பென......மகிழ்வர் - புதிதாக நீர் எழுந்தருளி வரும் இத்திருவேடத்தினைக் கண்டால் தமது பெரும் பேறென்றே மிகவும் மகிழ்ச்சியடைவர்; இனித் தாழார் - இனித் தாமதிக்க மாட்டார்,
(வி-ரை) இப்பாட்டு முழுதும், மேலும் வருவன, திருவெண்காட்டு நங்கையம்மையார் வயிரவ சங்கமரை நோக்கிக் கூறும் விண்ணப்பம்; அவரை அங்கு நின்றும் அகலாதிருக்கும் வகையாற் கூற வேண்டிய உயர்ந்த பொருளும், சிறந்த ஏற்ற சொல்லாற்றலும் பொருந்திய உயர்குடிப் பண்பாடு கண்டுகொள்க. இப்பாட்டினில் "வளவ நின்புதல்வன்" (116) என்ற பாட்டினிற் போலச்சிறந்த மந்திரித் தன்மையாகிய அறிவு நுட்பமும் புலப்படுதல்காண்க.
அமுது செய்விப்பார் - இற்றைக்குக் கண்டிலர் போனார் - தேவரீர் விரும்பி வந்த காரியமே அவர் தேடிப் போயின காரியம் என்றது அவரது விருப்பத்தைக் கவரச் செப்பியபடி; இற்றைக்கு யாவரையுங் கண்டிலர் - இஃதோர் புதுமை என்றதனோடு உமது அருமைப்பாடு மிகுவதாம் என்றதும் குறிப்பு.
வம்பென - வம்பு - புதுமை; வம்பென - உலகியலினில்லாத சழக்கு என்ற குறிப்பும் காண்க. "வம்ப மாரியைக் காரென."
பெரிய பேறு - பெறுதற்கரிய பெரும்பேறு.
தாழார் - பயிரவர் அகன்று விடாமைக்குரிய காரணங் காட்டியபடி; இவ்வேளைக்குள் அறிந்திருப்பர் ஆதலின் தாழார் என்பது குறிப்பு.