"இப்பொழுதே வந்தணைவ ரெழுந்தருளி யிரு"மென்ன, "ஒப்பில்மனை யறம்புரப்பீ!; ருத்தரா பதியுள்ளோஞ்; செப்பருஞ்சீர்ச் சிறுத்தொடர் தமைக்காணச் சேர்ந்தனம்யாம்; எப்பரிசு மவரொழிய விங்கிரோ" மென்றருளி, | 40 | (இ-ள்) இப்பொழுதே......என்ன - இப்போதே விரைவில் வந்து அணைகுவர்; அவ்வளவும் தேவரீர் இங்கு எழுந்தருளி யிருக்கவேண்டும் என்று கூற; ஒப்பில் மனை......என்றருளி - ஒப்பற்ற இல்லறத்தை வழுவாது காத்து நடத்துகின்றவர்களே! வடதேசத்தில் உள்ளோம்; சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய சிறுத்தொண்டரைக் காணும்பொருட்டு இங்கு வந்து சேர்ந்தோம் யாம்; எவ்வகையாலும் அவர் இல்லாதபோது இங்கு இரோம் என்று அருளிச் செய்து, (வி-ரை) இப்பொழுதே வந்தணைவர் - "இனித் தாழார்" என முன்பாட்டிற் கூறியதனைத் தொடர்ந்து கூறியது அக்கருத்து. ஒப்பில் மனையறம் புரப்பீர் - சரிதமேல் நிகழ்ச்சிக் குறிப்பு. உத்தராபதி - வடதேயம். "வடதேசத்தோம்" (3702); "உத்தராபதியார்" என்று இக்கோயிலில் இம்மூர்த்தி இன்றும் வழங்கப்படுதல் காண்க. காண - "அன்பு நுகர்ந் தருளுதற்கு" (3684); உலகத்தார்க்கு வெளிப்படக்காட்டும் பொருட்டுத் தாம் காண என்ற குறிப்பும் காண்க. "கண்டு காட்டலின்" (போதம்); அறியச் செய்ய - காட்ட - என்னும் பொருட்டு. எப்பரிசும் - நீவிர் கூறிய எக்காரணங் கொண்டும். |
|
|