கண்ணுதலிற் காட்டாதார் "கணபதீச் சரத்தின்கண் வண்ணமல ராத்தியின்கீ ழிருக்கின்றோ; மற்றவர்தா நண்ணினா னாமிருந்த பரிசுரைப்பீ" ரென்றருளி அண்ணலார் திருவாத்தி யணைந்தருளி யமர்ந்திருந்தார். | 41 | (இ-ள்) கண்ணுதலிற் காட்டாதார் - நுதற்கண்ணை மறைத்து வந்த அவர்; கணபதீச்சரத்தின்கண்.....என்றருளி - கணபதீச்சரத்திலே அழகிய மலர்களை உடைய திருவாத்தியின் கீழே சென்று அமர்கின்றோம்; அவர் வந்தால் நாம் அங்கிருக்கும் தன்மையினைச் சொல்வீராக என்றருளிச் செய்து; அண்ணலார்.....இருந்தார் - இறைவனார் திருவாத்தி மரத்தினடியிற் சேர்ந்தருளி விரும்பி எழுந்தருளியிருந்தனர். (வி-ரை) கண்ணுதலிற் காட்டாதார் - நுதற் கண்ணை மறைத்து வந்த வயிரவ சங்கமக் கோலத்தர். இருக்கின்றோம் - இருப்போம்; தங்குவோம்; எதிர்காலம் நிகழ்காலமாய் வந்தது. இருந்த - இருக்கும்; எதிர்காலம் இறந்தகாலப் பொருளில் வந்தது. திருவாத்தி - இம்மரம் இன்றும் இக்கோயிலிற் காணவுள்ளதாம். அதன்கீழ் உத்தராபதியார் சந்நிதியும் உண்டு. இஃது ஆத்தியின் ஒருவகை. காட்டாத்தி என்பர். இந்த ஆறு பாட்டுக்களாலும், முன் பாட்டுக்களாலும் சிவனருளும் தசகாரியங்களுள் சிவரூபம், சிவதரிசனம் என்ற காரியங்கள் நிகழ்ந்தமை குறிப்பு. |
|
|