பாடல் எண் :3701

நீரார் சடையா ரடியாரை நேடி யெங்கும் காணாது
சீரார் தவத்துச் சிறுத்தொண்டர் மீண்டுஞ் செல்வ மனையெய்தி
ஆரா வின்ப மனைவியார்க் கியம்பி யழிவெய் திட,வவரும்
பாரா தரிக்குந் திருவேடத் தொருவர் வந்த படிபகர்ந்தார்.
42
(இ-ள்) நீரார்......எய்தி - கங்கையினைச் சூடிய சடையவரது அடியார்களைத் தேடி எங்கும் காணப்பெறாமையால் சிறந்த தவத்தினையுடைய சிறுத்தொண்டர் மீட்டும் தமது செல்வம் பொருந்திய திருமனையினிடத்தே வந்து சேர்ந்து; ஆரா...... அழிவெய்திட -அளவு பெறாத இன்ப மனைவியார்க்குச் சொல்லி வருந்த; அவரும்......பகர்ந்தார் - அவரும், உலகம் அன்பு கூறும் திருவேடம் பூண்ட ஒருவர் வந்த படியினை அவர்க்குச் சொல்லினார்.
(வி-ரை) நேடி - தேடி; எங்கும் நேடியும் - என்று உம்மை விரிக்க.
காணாது - காணாமையால்; காரணப் பொருளில் விந்த வினையெச்சம்.
சீரார் தவத்து - அற்றை நாள் அதுவரை அடியாரைக் காணாமையும் தவமே என்பது குறிப்பு. என்னை? அடியவர் ஒருவரும் வாராது செய்தருளி இறைவர் தாமே வந்து அருள்புரிய எழுந்தருளப் பெற்றது இவரது பெருந்தவப் பயனும் என்பதாம்.
மீண்டும்.....எய்தி - மீண்டும் என்றதனால் முன்னரும் இவ்வாறு போவதும் மீள்வதுமாயினார் என்பது குறிப்பு. செல்வமனை - சிவனருட் செல்வம் நிறைந்த திருமனை; அரனுக்கும் அடியார்க்குமாக உலகியற் செல்வங்களும் அவ்வியல்பிலே நிறைந்த; மனமொழி மெய்களாகிய கரணங்களும் அருள்பற்றி நிறைந்த குறிப்புமாம்.
ஆரா இன்ப மனைவியார் - ஆர்தல் - நிறைதல்; ஆரா - நிறைவுபடாத - அளக்கலாகாத; இன்பம் - இன்பத்துக்குக் காரணமாகிய வயிரவச் சங்கமரை வரக் கண்ட மையால் அளவில்லாத மகிழ்ச்சி யடைந்திருந்த என்றுரைப்பாரு முண்டு.
அழிவெய்திட - அமுது செய்விக்க அற்றைக்கு அடியார் எவரையும் காணப் பெறாமையால் மனமழிந்து வருந்த.
பார் ஆதரிக்கும் திருவேடம் - உலகிற் கண்டார் எவரும் அன்பு கூரும் அழகிய திருவேடம்; அத்திருவேடத்தின் அழகு முன்னர்க் கூறியவாற்றானறிக. "உளங்கொள்பவர் கரைந்துடலு முயிருமுரு கப்பெருக" (3689) என்றும், "அருள் பொழியுந் திருமுகத்தி லணிமுறுவ னிலவெறிப்ப" "புவி ஏத்த" (3694) என்றும் வருவன காண்க. பாரிலுள்ளோரை ஆதரிக்கும் என்பதும் குறிப்பு.
திருவேடத்து ஒருவர் - திருவேடம் உலகர் காணத் தாங்கியவரே யன்றி, அவர் "ஒன்றே பதி" என மறைகள் பேசும் ஒருவராகிய சிவபெருமானே என்ற குறிப்பும் காண்க. ஒருவரே - தேற்றமும் பிரிநிலையும் படநின்ற ஏகாரம் தொக்கது. பலரின்றி ஓர் அடியவர் வந்தார் என்ற எண்ணுக் குறிப்புமாம்.
ஆரா அன்பின் - என்பதும் பாடம்.