"அடியே னுய்ந்தே! னெங்குற்றா ருரையா" யென்ன, வவர்மொழிவார் "வடிசேர் சூல கபாலத்தார்; ‘வடதே சத்தோ’ மென்றார்; வண் டுடிசேர் கரத்துப் பயிரவர்யாஞ் சொல்ல விங்கு மிராதேபோய்க் கடிசேர் திருவாத் தியினிழற்கீ ழிருந்தார் கணப தீச்சரத்து;" | 43 | (இ-ள்) அடியேன்......என்ன - அடியேன் உய்தி பெற்றேன்; அவர் எங்கு இருக்கின்றார்! சொல்வாயாக! என்று கூற; அவர் மொழிவார் - அவ்வம்மையார் மொழிவாராகி; வடிசேர்....கணபதீச்சரத்து - வடித்த கூர்மையுடைய சூலத்தினையும் கபாலத்தினையும் ஏந்தியவர்; நாம் வடதேசத்திலுள்ளோம் என்றார்; அவர் வளமையுடைய துடியினை ஒரு கையினிற் பிடித்த வயிரவச் சங்கமர்; நாங்கள் மனையில் எழுந்தருளி யிருக்கும்படி சொல்லி வேண்டவும் இங்குத் தங்கி இருக்காமல் சென்று கணபதீச் சரத்தில் மணமுடைய திருவாத்தியின் நிழற்கீழ் இருந்தார். (வி-ரை) அடியேன் உய்ந்தேன் - எனது நியமம் பிழையாது செய்யப் பெறுதலின் உய்தி பெற்றேன். இறந்தகாலம் விரைவு குறித்தது. சரித விளைவின் முற்குறிப்புமாம். வடிகொள்.....கணபதீச்சரத்து - இத்துணையும் நிகழ்ந்தவற்றை யெல்லாம் சுருக்கி வடித்து அம்மையார் தமது நாயகனார்க்குக் கூறியது. கவிநயமும் பொருளமைதியின் அழகும் கண்டு களிக்க. வடிகொள் சூல கபாலத்தர் - "வயங்கொளிமூ விலைச்சூலம்....பொலிய" (3693) "மருள்மொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப" (3694) என்று கூறியபடி, அது காண்போர் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. சூலமும் காபலமும் வயிரவ சங்கமர் என்பதனை அறிவிக்கும் அடையாளங்கள். முன்னர்த் "திருவேடத்து ஒருவர்" (3701) என்றது அவரது சிவனடியார் வேடத்தைப் பொதுமையி லுணர்த்தியது. துடிசேர் கரத்துப் பயிரவர் என்றது அவர் இதுவரை வந்த அடியார்களின் வேறாய், அகப்புறச் சமயத்து வைரவ சமயச் சார்புடைய சங்கமர் என்று முடித்துக் கூறி அறிவித்த நயம் கண்டுகொள்க. |
|
|