என்று மனைவி யாரியம்ப, வெழுந்த விருப்பால் விரைந்தெய்திச் சென்று கண்டு திருப்பாதம் பணிந்து நின்றார் சிறுத்தொண்டர்; நின்ற தொண்டர் தமைநோக்கி "நீரோ பெரிய சிறுத்தொண்டர்?" என்று திருவாய் மலர்ந்தருள, விறைவர் தம்மைத் தொழுதுரைப்பார், | 44 | (இ-ள்) என்று.....இயம்ப - என்றிவ்வாறு மனைவியார் சொல்ல (அது கேட்டு); எழுந்த....சிறுத்தாண்டர் - மேன்மேல் எழுந்த விருப்பத்தினாலே விரைந்து சென்று சேர்ந்து அவரைக் கண்டு திருப்பாதங்களிற் பணிந்து நின்றார்; நின்ற....திருவாய் மலர்ந்தருள -(அவ்வாறு) நின்ற தொண்டரை நோக்கி "நீர்தாமோ பெரியவராய்ச் சொல்லப்படுகின்ற சிறுத்தொண்டர் என்பவர்?" என்று திருவாய் மலர்ந்தருளி வினவியருள; இறைவர்....உரைப்பார் - (அவர்) இறைவரை வணங்கி உரைப்பாராகி, (வி-ரை) எழுந்த...நின்றார் - அடியாரைக் காணுதற் கிருந்த பேரார் வத்தினை, விரைந்து எய்திச் சென்று - கண்டு - பணிந்து - நின்றார் என்று கூறிய செறிவும் விரைவும் பற்றி விளக்கிய கவிநயம் காண்க. நின்றார் சிறுத்தொண்டர் என்று எழுவாயைப் பின் வைத்த நிலையும் வினை முடிவின் விரைவு குறித்தது. நின்ற - அவ்வாறு பணிந்து நின்ற. நீரோ பெரிய சிறுத்தொண்டர்? - பெரிய - சிறு - முரண் தொடைச்சுவை படக்கூறியது நயம்; பெருமை புகழாலும் அடிமைப் பண்பினாலுமாம்; அவற்றுடனே சிறுத்தொண்டர் - என்ற அவர் பெயரால் அறிந்தமை புலப்படக் கூறியபடி; "தொண்டானார்க் கெந்நாளுஞ் சோறளிக்கும் திருத்தொண்டர்" (3695) என முன்னர் அறிவித்தமையும் காண்க. திருவாய் மலர்ந்தருள - பெரியவர்கள் முன், தாம் முன்னே பேசாது, அவர்கள் வாய்மொழியை எதிர்பார்த்து வணங்கி நிற்றலும், வந்த நிலையைக் குறிப்பாலுணர்த்தலும், கேட்டவற்றிற்கு அவ்வளவில் விடைமொழிந்து நிற்றலும் மரபு; இங்கு வயிரவர் வினவியபின்னே நாயனார் விடைமொழிந்து தமது கருத்தினை உணர்த்தும் நிலை கண்டுகொள்க. "கைதொழு தவருமுன்னிற்ப" (2555); |
|
|