"பூதி யணிசா தனத்தவர் முன் போற்றப் போதே னாடியினும் நாத னடியார் கருணையினா லருளிச் செய்வர் நானென்று; கோதி லன்பர் தமையமுது செய்விப் பதற்குக் குலப்பதியிற் காத லாலே தேடியுமுன் காணேன் றவத்தா லுமைக்கண்டேன்," | 45 | (இ-ள்) பூதி..நான் என்று - திருநீற்றுத் தொண்டர்களின் முன்சென்று துதிக்கவும் நான் தகுதியில்லே னானாலும் சிவனடியார்கள் தங்கள் கருணையினால் அப்பெயருடையவன் நான் என்று சொல்லுவார்கள்; கோதில்....காணேன் - குற்றத்தினை இல்லையாகச் செய்யும் அடியார்களை அமுது செய்விப்பதற்காக இப்பழமையாகிய பதியில் பெருவிருப்பத்தாலே எங்கும் தேடியும் இதன்முன் கண்டிலேன்; தவத்தால் உ(ம்)மைக் கண்டேன் - முன்னைத் தவத்தின் பயனாலே உம்மைக் கண்டேன்; (வி-ரை) பூதி அணி சாதனத்தவர்......போதேன் - பூதி அணி சாதனந்தவர் - திருநீறணிந்த சிவனடியார்கள்; சாதனம் - சிவசாதனம்; அணி - அணியும்; அழகிய என்றலுமாம். பூதியாகிய அணி - சாதனம்; சாதனம் - உருத்திராக்கம் என்று கொண்டு பூதியும் அணி - அக்கமணியும் என்று உம்மைத் தொகையாக உரைத்தலுமாம்; "திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி" (தேவா); பூதி - ஐசுவரியம்; விபூதி - திருநீறு; இவையே அடிமைத் தன்மையைக் காட்டும் திரு அடையாளங்கள் எனக்கொண்டு அவ்வாறே தாம் வழிபட்டு வந்த நிலையினைக் குறித்தபடி. முன் போற்றப் போதேன் - முன்னின்று துதிக்கவும் தகுதியில்லேன்; போதுதல் - தகுதி பெறுதல். நாதன் என்று கருணையினால் - தகுதி யில்லாதாரையும் தக்கவர்களாக ஆக்கும் கருணை நோக்கம் செய்து உய்விக்கும் அருள் காரணமாக. கோதில் - கோது - குற்றம், தீமை; தீமையை இல்லையாக்கும்; குலப்பதி - இந்தப் பழம்பதி; சிறந்த இப்பதி என்றலுமாம். காதலாலே தேடியும் - காதலாலே என்றது முயற்சியின் மிகுதி குறித்தற்கு. தவத்தால் கண்டேன் - "முன்புசெய் தவத்தி னீட்ட" த்தின் பயனாக; உண்மை! உண்மை!! முற்றும் உண்மை!!!; இவரது "அன்பு நுகர்ந் தருளுதற்குச் சித்த நிகழ் வயிரவராய்ச் திருமலைநின்று" இறைவர் தாமே வருதற்கும், புவிவாழக் காண்பதற்கும் மிகப் பெருந்தவம் வேண்டும்! இவரைப் போலத் தவப்பெருந் தொண்டு செய்தாரும் மிகப்பெரிய அருள் பெற்றாரும் அரிது! அரிது! என்க. |
|
|