பாடல் எண் :3705

"அடியேன் மனையி லெழுந்தருளி யமுது செய்யவேண்டு" மென,
நெடியோ னறியா வடியவர்தாம், "நிகழுந் தவத்தீ ருமைக்காணும்
படியால் வந்தோ; முத்தரா பதியோ; மெம்மைப் பரிந்தூட்ட
முடியா துமக்குச் செய்கையரி தொண்ணா" தென்று மொழிந்தருள;
46
(இ-ள்) அடியேன்.....என - அடியேனது மனையில் தேவரீர் எழுந்தருளி வந்து திருவமுது செய்தல் வேண்டும் என்று வேண்ட; நெடியோன்.....மொழிந்தருள - நீண்ட மாலும் அறிய மாட்டாத அவ்வடியவர்தாம் விளங்கும் தவத்தினை உடையவரே! உம்மைக் காணும் பொருட்டாக வந்தோம்; வடநாட்டில் உள்ளோம்; எம்மை அன்புடன் அமுது ஊட்டுவதற்கு உமக்கு முடியாது;அச்செய்கை செய்தல் அரிதாகும்; ஆதலின் உம்மால் செய்யவொண்ணாது என்று மொழிந்தருள,
(வி-ரை) அடியேன்......வேண்டும் - இது சிறுத்தொண்டர் செய்து கொண்ட விண்ணப்பம்.
நிகழும் தவத்தீர் - நிகழ்தல் - விளங்குதல்; காண - காணும் பொருட்டே; பிரிநிலை ஏகாரம் தொக்கது. காணுதல் - விளக்கங் காணச் செய்தல். உலகுக்குக் காட்டக காணுதல் என்க; "தொண்டரை விளக்கங் காண.....உய்யுமந் நெறி காட்டு மாற்றால் " (369); "காட்டுவான் வந்தார்" (407) "வல்லரென் றறிவிக்கவே" (445) என்பன முதலியவை காண்க.
உத்தரா பதியோம் - வடநாட்டில் வாழ்விடம் உடையோம்; இம்மூர்த்தியார் இப்பெயராலே இப்பதியில் இன்றும் வழங்கி வழிபடப் பெறுகின்றார்.
எம்மைப் பரிந்தூட்ட உமக்கு முடியாது என்க. ஊட்டுதல் - அமுது உண்ணச் செய்தல்; பரிவு - அன்பு; உமக்கு - உம்மால்; உருபு மயக்கம். செய்கை உமக்கு அரிது - என்று பின்னருங் கூட்டி உரைக்க நின்றது.
பரிந்தூட்ட உமக்கு முடியாது; செய்கை அரிது; ஒண்ணாது - அரிது - உமக்கு மட்டிலன்றி இச்செய்கை வேறு எவர்க்கும் அரிது; ஆதலின் எவர்க்கும் ஒண்ணாது என்று முடித்தவாறு; மும்முறை கூறிய உறுதிப்பாடுமாம்.