பாடல் எண் :3706

"எண்ணா தடியேன் மொழியேனீ ரமுது செய்யு மியல்பதனைக்
கண்ணார் வேட நிறைதவத்தீ! ரருளிச் செய்யுங் கடிதமைக்கத்,
தண்ணா ரிதழி முடியார்தம் மடியார் தலைப்பட் டாற்றேட
ஒண்ணா தனவு முளவாகு; மருமை யில்லை" யெனவுரைத்தார்.
47
(இ-ள்) எண்ணாது.....அடியேன் - அடியேன் தீர ஆலோசியாமற் சொல்லமாட்டேன்; நீர்.....கடிதமைக்க - கண்ணிறைந்த அழகினை உடைய நிறைந்த தவத்தினையுடையவரே! தேவரீர் திருவமுது செய்யும் இயல்பினை, விரைவில் அமைப்பதன் பொருட்டு, அருளிச் செய்வீராக!; தண்ணார்....என உரைத்தார் - குளிர்ந்த கொன்றை மாலையை முடியில் தரித்த இறைவரது அடியார்கள் கிடைக்கப் பெற்றால் தேடினும் கிடைக்காதனவும் கிடைக்க உள்ளனவாகும்; எனக்கு அருமையில்லை என்று சொன்னார்.
(வி-ரை) எண்ணாது - தீர ஆலோசியாமல்; அரசாங்க சேனைத் தலைவராயிருந்த நிலைக்குறிப்பும் காண்க; "எண்ணித் துணிக கருமம்"(குறள்) என்பது அரசநீதியுமாம்.
இயல்பதனை அருளிச் செய்யும் என்று கூட்டுக. இயல்பு - அமுதுக்குரிய சாதனமும் அமைக்கும் பிற இயல்புகளுமாம்.
கடி தமைக்க - ஆர்வத்தின் அளவு குறித்தது.
தண்ணார்......இல்லை - தலைப்பட்டால் - தலைப்படுதல் - கிடைக்கப் பேறு பெறுதல்; தேட ஒண்ணாதனவும் உளவாகும் - அஃது அடியார் பெருமையாலாவதொன்றன்றித் தற்போத முனைப்பாற் கூறுவதன்று என்றபடி.
ஒண்ணாதனவு முளவாகும் - "ஒண்ணாது" (3705) என்று அவர் கூறியதனைத் தொடர்ந்து கொண்டு விடை கூறியபடி; தலைப்பட்டால் - அருமையில்லை என்று பின்னும் கூட்டுக. முடியாது - அரிது - ஒண்ணாது - என்று மும்முறை கூறிய உத்தராபதியாரை மறுத்துக் கூறுதல் அடியார் பெருமைக்கும், தமது சிறுத்தொண்டராம் தன்மைக்கும் பொருந்தாதாதலின், அதற்கு விடை, அடியார் தலைப்படும் அருமையின் பாலும் அவர்தம் பெருமையின் பாலும் சார்த்திக் கூறி மறாது மறுத்து விண்ணப்பித்த மரபு நுட்பம் கண்டுகொள்க.
கண்ணார் வேடநிறை தவத்தீர் - "பாராதரிக்கும் திருவேடத் தொருவர்" (3701); தவநிறை வேடத்தீர் என்க; இறைவரே தவவேடம் தாங்கி வந்தவர் என்ற குறிப்பும் போதருதல் காண்க.
ஒண்ணாதனவும் - நீர் கூறியபடி ஒண்ணாதன என்பதுண்மையாயினும் என உடன்பட்டு, மறுமொழி கூறியவாறு; ஒண்ணாதனவும் - உளவாகும் - அருமையில்லை - என்பன முடியாது - அரிது - ஒண்ணாது என்று அவர் கூறிய மூன்றிற்கும் முறையே விடையாவதும் கண்டுகொள்க.