"அரிய தில்லை" யெனக்கேட்ட பொழுதி லழகு பொழிகின்ற பெரிய பயிர வக்கோலப் பெருமா னருளிச் செய்வார்"யாம், பரியுந் தொண்டீர்! மூவிருது கழித்தாற் பசுவீழ்த் திடவுண்ப; துரிய நாளு மதற்கின்றா; லூட்ட வரிதா முமக்" கென்றார். | 48 | (இ-ள்) அரியதில்லை....பொழுதில் - அருமையில்லை என்று சிறுத்தொண்டர் சொல்லக் கேட்ட பொழுதிலே; அழகு......அருளிச் செய்வார் - அழகினைச் சொரிகின்ற பெரிய வயிரவத் திருக்கோலங்கொண் டெழுந்தருளிய இறைவர் அருளிச் செய்வாராய்; யாம்....என்றார் -பரிவுடைய தொண்டரே! நாம் மூன்று இருதுக்காலம் கழித்தால் ஒருபோது பசுவினை வீழ்த்து அமுது இட உண்பது நியமம்; அவ்வாறு உண்பதற்குரிய நாளும் இன்றைய நாளே யாகும். ஆனால் உமக்கு அவ்வாறு எம்மை ஊட்டுதல் அரிதாகும் என்று அருளிச் செய்தார். (விரை) அழகு பொழிகின்ற.....பெருமான் - முன் "கண்ணார் வேடம்" "பாராதரிக்கும் திருவேடம்" என்றவை காண்க. அருளிச் செய்வார் - அருளிச் செய்வாராய்; முற்றெச்சம்; அருளிச் செய்வாராய் - என்றார் என்று முடிக்க. பரியும் தொண்டீர் - பரிவு - சிவனடியாரை அமுது செய்வித்தலின்கண் மிக்க அன்பு; பரியும் - எம்மை ஊட்டுவித்தலின் மிகப்பரிவு பூண்ட என்ற குறிப்புமாம். மூவிருது - இருது - இரண்டுமாத எல்லையுடைய காலக் கூறு; மூவிருது - ஆறுமாத எல்லை. பசு வீழ்த்து இட உண்பது - பசுவினை வீழ்த்து அமுதாக்கி இட அதனையே நாம் உண்பது நியமம் என்க; பசு - இங்குப் பயிரவ சமயத்தார் அமுது செய்யும் உணவுப் பொதுமை குறித்தது. "யாகப் பசு" என்பது போலக் கொள்க. ஆன் (பசு) என்பதன்று. வைரவம் என்பது அகப்புறச் சமயங்களாறனுள் ஒன்று. இது "பெரும்பாலும் வாம மதத்தோ டொத்துச், சிறுபான்மை ஆசாரங்களால் வேறுபட்டு, வைரவனே பரம்பொருள் எனக்கொண்டு வைரவ மதத்திற் சேர்தலே முத்தி என்பதாம்" (மாபாடியம்); இதனுள் ஒரு ஒருசார் மாமிச உணவும் உடன் படுவர்; வாமிகளுள் ஒருசாரார் கள்ளுண்ணுதல் போல; வயிரவர் காபலத்தில் விட்டுணுவின் இரத்த பிச்சை ஏற்ற புராண வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது; ஆன் புலால் உணவு எவ்வகை அகச் சமயத்துக்கும் உடன்பாடன்று; இங்குப் பசு என்பது ஆன் என்றுரைப்பாரு முண்டு; "அமுதாம் பசுத்தான் இன்னதென" "மேல், நரப்பசுவாம்" என்பனவும் பசு என்பதன் பொதுமைப் பொருளை விளக்குதல்காண்க. யாம் உண்பது என்று கூட்டுக; நியமம் என்பது குறிப்பெச்சம், அதற்கு உரிய நாளும் இன்றே - என்க; அதற்கு - அவ்வாறு மூவிருது கழித்துண்பதற்கு; இன்றே - தேற்றேகாரம் விரிக்க; ஆல் அசை. ஊட்ட உமக்கு அரிதாம் - இதனை மீண்டும் சொன்னது தொண்டரது ஆசையினையும் ஆர்வத்தினையும் உறுதிப்பாட்டினையும் மிகுவித்தற்கு. |
|
|