பாடல் எண் :3710

"யாது மரிய தில்லையினி யீண்ட வருளிச் செய்யு"மென,
நாதன் றானு "மொருகுடிக்கு நல்ல சிறுவ னொருமகனைத்
தாதை யரியத் தாய்பிடிக்கும் பொழுதிற் றம்மின் மனமுவந்தே
ஏத மின்றி யமைத்தகறி யாமிட் டுண்ப"
தெனமொழிந்தார்.
51
(இ-ள்) (அது கேட்ட தொண்டனார்) யாதும்......என - யாதும் அடியேனுக்கு அரியதில்லை; இனி, விரைவாக அருளிச் செய்யும் என்று கூற; நாதன் தானும் - இறைவரும்; ஒரு குடிக்கு....என மொழிந்தார் - ஒரு குடிக்கு நல்ல சிறுவனாய் ஒரே மகனாயுள்ள அவனைத் தந்தை அரியவும் அப்போது தாய் பிடிக்கும் பொழுதில் மூவரும் தம்மில் மனமகிழ்ந்தே குற்றமின்றி அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாம் என்று மொழிந்தருளினர்.
(வி-ரை) இனி ஈண்ட அருளிச் செய்யும் - இனியும் தாமதமின்றி விரைவில் அருள் செய்யும் - இனியும் தாமதமின்றி விரைவில் அருள் செய்யும் என்றது இதுவரை "ஒண்ணாது" (3705) என்றும், "ஊட்ட அரிதாம்" (3707) என்றும், "புகல்வதொன்று" (3709) என்றும் அங்கங்கும் உலகியலுக்கு மாறான கொடிய செய்தியாதலிற் றாழ்த்துத் தயங்கி உரைப்பார் போன்று ஒன்றொன்றாக மேன்மேல் ஏற்றிக்கூறி வருதலின், இனி அவ்வாறு ஒன்றும் அஞ்சாதே விரைந்து கூறுவீர் என்ற குறிப்பு; இறைவர் அவ்வாறு தயங்கிக் கூறியது உலகியல் நிலையில் இத்தகைய பெருஞ் செயலுக்கு ஒருவர் மனத்துணிவு கொள்ளப் படிப்படியாய்க் கொளுத்தும் முறையிற் கூறியபடி.
ஈண்ட - அணிமையாக - விரைவாக.
ஒரு குடிக்கு......இட்டு உண்பது - தாம் உண்ணும் இயல்பினை, வயதும் அங்கக் கூறும் பற்றி முன்பாட்டிற் கூறினார்; இங்கு மேல் உள்ள பேரியல்பினை முடித்துத் தொகுத்துக் கூறுகின்றார். குடி - குடும்பம். தம்மில் - தாதை, தாய், மகன் மூவருள்ளும்.
ஏதம் - துன்பம் - மனவருத்தம் முதலிய எவ்வகைக் கேடுகளும்.