பாடல் எண் :3711

அதுவு முனைவர் மொழிந்தருளக் கேட்ட தொண்ட"ரடியேனுக்
கிதுவு மரிதன் றெம்பெருமா னமுது செய்யப் பெறி"லென்று
கதுமென் விரைவி லவரிசையப் பெற்றுக் களிப்பாற் காதலொடு
மதுமென் கமல மலர்ப்பாதம் பணிந்து மனையில் வந்தணைந்தார்.
52
(இ-ள்) அதுவும்......தொண்டர் - அதனையும் முதல்வர் சொல்லியருளக் கேட்ட சிறுத்தொண்டர்; அடியேனுக்கு.....என்று - எமது பெருமானாராகிய தேவரீர் திரு அமுது செய்யும் பேறுபெற்றால் அடியேனுக்கு இதுவும் அரிதன்று என்று கூறி; கதுமென்......பெற்று -கதும் என விரைவினோடும் அவரது விடை பெற்று; களிப்பால்......வந்தணைந்தார் - பெருமகிழ்ச்சியினாலே ஆசையோடும் அவரது தேன்பொருந்திய மெல்லிய தாமரை போன்ற பாதங்களைப் பணிந்து போந்து தமது திருமனையில் வந்து அணைந்தனர்.
(வி-ரை) அதுவும் - அத்தகைய பெருந் துன்பச் சொல்லினையும்; முனைவர் - தலைவர்.
அமுது செய்யப் பெறில் இதுவும் அரிதன்று என்க. இதுவும் - செய்கையரிது - ஒண்ணாது - ஊட்ட அரிது என்று எடுத்துக் கூறிய இதுவும் என அண்மைச் சுட்டு; இது - இறுதியாய் மிக அரிதெனக் குறித்து முடித்த இது என்க. கேட்ட அப்போதே நாயனார் தமது மகனாரை அமுதாக்க உறுதி கொண்டனராதலின் அரிதன்று எனத் திண்ணமாகக் கூறினர் என்க. (3715) பார்க்க.
பெறில் அரிதன்று - பெறுதலே மிக அரிது; அதனைப் பெறில் ஏனையவழி அரிதாம் இதுவும் அரிதன்றாய் எளிதில் கைவரும் என்றபடி.
கதுமென் விரைவு - மிக்க விரைவு; ஒருபொருட் பண்மொழி; மிகுதி குறித்தது.
மதுமென் கமலம் - புதிதின் மலர்ந்த தாமரை; அழகு, செம்மை, மென்மை, இனிமை, நறுமை முதலிய எல்லாம் பொருந்தியதென்பது; எல்லாம் தருவது என்ற குறிப்புமாம். சிவானந்தத் தேனை யளிக்கும் மலர் என்பது குறிப்பு.
எம்பெருமான்! - அண்மைவிளி; உண்மைக் குறிப்பும்பட நின்றது.