அன்பு மிக்க பெருங்கற்பி னணங்கு திருவெண் காட்டம்மை முன்பு வந்து சிறுத்தொண்டர் வரவு நோக்கி முன்னின்றே இன்பம் பெருக மலர்ந்தமுகங் கண்டு பாத மிசையிறைஞ்சிப் பின்பு கணவர் முகநோக்கிப் பெருகுந் தவத்தோர் செயல் வினவ, | 53 | (இ-ள்) வெளிப்படை. அன்பு மிகுந்த பெரிய கற்பினிற் சிறந்த தெய்வத்தன்மை வாய்ந்த திருவெண்காட் டம்மையார் மனையின் முன் வாயிலில் வந்து சிறுத்தொண்டரது வரவை எதிர்நோக்கி முன்னே நின்றே, இன்பம் பெருக மலர்ந்திருந்த அவரது திருமுக விளக்கத்தினைக் கண்டு, அவரது திருவடிகளில் வணங்கிப் பின்னர்த் தமது கணவராகிய அவரை முகம் நோக்கி மாதவரது செயலைப் பற்றி வினவுதலும்; (வி-ரை) அன்பு....அம்மை - அன்பு - சிவனடியார் அடிமைத் திறத்தின் அன்பு; கற்பு - கணவனார் வழிநின் றொழுகும் திறம்; முன்னையது தம்மியல் பால் வருவதும், பின்னையது கணவர் சார்பு பற்றி வருவதுமாம்; அணங்கு - தெய்வத்தன்மை குறித்தது. முன்பு வந்து......முகநோக்கி - அடியாரை அமுதூட்டுதலின் அம்மையாருக்கிருந்த ஆர்வமும் உறைப்பும் குறித்தது; முன்பு வந்து - முன் கடைவாயிலின் வந்து நின்று; கணவனார் மனைக்குள் வந்தபின் வினவி அறிதற்குரிய காலத்தாழ்வும் நேராது அறியும் அவாவினால் முன்கடையில் நின்றார் என்க. "வந்தபின் மனையிவாரும் வாய்தலி னின்று வாங்கி" (458). வரவு நோக்கி முன்னின்றே - காத்து; "முன்நின்று" என்பதும் அக்கருத்து; மலர்ந்த முகம் கண்டு - அவர் சொல்வதற்கு முன் முகக் குறியினால் அகக் குறிப்புணரும் ஆர்வம். "அகத்தி னழகு முகத்திற் றெரியும்" (பழமொழி); "அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம், கடுத்தது காட்டும் முகம்" (குறள்). "முன்னம், முகம் போல முன்னுரைப்ப தில்." முகம் கண்டு - என்றது தாமாகக் கருதலளவையாற் குறிப்பினா லறிதற்கும், முகநோக்கி (வினவ) என்றது தாம் அறிந்ததனை உறுதியாக்குதற்கு அவர் வாக்கினாற் கேட்பதன் பொருட்டு நோக்குதற்கும் வந்தன வாதலின் கூறியது கூறலன்மை யுணர்க. தவத்தோர் - அடியவர்; இங்கு வயிரவ மாதவக் கோலச் சங்கமர் திறம் குறித்தது. அன்பின் மிக்க - என்பதும் பாடம். |
|
|