பாடல் எண் :3713

"வள்ள லாரு மனையாரை நோக்கி" வந்த மாதவர்தாம்
உள்ள மகிழ வமுதுசெய்ய விசைந்தார்; குடிக்கோர்சிறுவனுமாய்க்
கொள்ளும் பிராய மைந்துளனா யுறுப்பிற் குறைபா டின்றித்தாய்
பிள்ளை பிடிக்க வுவந்துபிதா வரிந்து சமைக்கப் பெறி"னென்றார்.
54
(இ-ள்) வள்ளலாரும்.....மனையாரை நோக்கி - வள்ளலாராகிய சிறுத்தொண்டரும் மனைவியார் திருவெண்காட் டம்மையாரைப் பார்த்து; வந்த......பெறின் என்றார்-வந்தெழுந்தருளிய மாதவர் தாம், ஒருகுடிக்கு ஒரு மகனாக ஐந்து வயதுள்ளவனாய், உறுப்புக்களிற் குறைவு எவையும் இல்லாதவனாகிய பிள்ளையைத் தாய்பிடிக்க மகிழ்வுடன் தந்தை அரிந்து அமுது சமைக்கப் பெற்றால்; உள்ள மகிழும்படி திருவமுது செய்ய இசைந்தருளினார் என்றனர்.
(வி-ரை) வந்த......இசைந்தார் - என்று முன்னர்க் கூறி மேல்வருவனவற்றைப் பின்வைத்தது அவரது இசைவினை முன்கூறி அம்மையாரது பேர் ஆர்வத்தினை அமைவுபடுத்தற் பொருட்டு; சமைக்கப் பெறின் - இசைந்தார் - என்று கூட்டுக. இசைந்தார் - இசைவேன் என்றார்.
குடிக்கோர்...பெறின் - மாதவர் முன் (3709-3710) கூறியவற்றின் சாரமாய்ச் சுருக்கி உரைத்த திறம் காண்க.
கொள்ளும் - நிரம்பும்; இன்றி - இல்லாதவனாய்; உள்ள பிள்ளை என்க; பிள்ளை - பிள்ளையை, உவந்து - தாய் - பிதா என்ற இருபாலும் சார்வதனால் இடையில் வைத்தார்; "தம்மில் மனழவந்தே" (3710).
பெறின் - என்றாமர் இவ்வளவும் பெறுதற்கருமைகுறித்தற்கு; "அகனமர்ந்து......முகனமர்ந் தின்சொல னாகப் பெறின்" (குறள்) என்புழிப் போல.