அரிய கற்பின் மனைவியா ரவரை நோக்கி யுரைசெய்வார் "பெரிய பயிர வத்தொண்ட ரமுது செய்யப் பெறுவதற்கிங் குரிய வகையா லமுதமைப்போ மொருவ னாகியொருகுடிக்கு வருமச் சிறுவன் றனைப்பெறுமா றெவ்வா?"றென்று வணங்குதலும்; | 55 | (இ-ள்) அரிய......உரை செய்வார் - அருமையாகிய பெருங் கற்பினையுடைய மனைவியார் அவ்வாறுரைக்க அவரைப் பார்த்து உரை செய்வாராகிய பெரிய.....அமைப்போம் -பெருமையுடைய பயிரவத் தொண்டர் திருஅமுது செய்யும் பேறு பெறுவதற்காக உரிய வகையினாலே திருவமுதது அமைப்போமாகியநாம்; ஒருவனாகி.....வணங்குதல் - ஒரு குடிக்கு ஒரே மகனாகி வரும் அந்தச் சிறுவனை நாம் பெறுவது எவ்வாறு? என்று சொல்லி வணங்குதலும், (வி-ரை) இது மாதவர் கருத்தினை நாயனார் கூறக்கேட்ட மனைவியார் சொல்லியது. தாய்த்தன்மையின் தண்ணளி கூர்ந்தறிந்த அம்மையாராதலின் "ஒருவனாகி வரும் அச்சிறுவனைப் பெறுவ தெவ்வாறு?" என்ற ஒன்றே தமது உள்ளத்தில் முன்வந்து நிற்கப்பெற்று வினவியபடி; அதன்மேல் அரிய வினை செய்யும் நிலையளவு அவர் மனம் மேற்சென்றிலது; ஆனால், மனத்திண்மை பெற்றாராதலின், நாயனார் உள்ளம் அதன்மேலும் அவ் அரிய வினையின்பாற் சென்று அது பிறரெவர் பாலும் எவ்வாற்றானும் கிடைத்தற் கருமையினை எண்ணித் தாமே துணிந்தமை மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க; அடியாரை ஊட்டும் அன்பின்றிறம் இவ்விருவர் பாலும் ஒன்றுபோல நிகழப்பெறினும் உலகியலிற் பெண்பாலாரின் அன்பின் றிறமும் ஆண்பாலாரின் அவ்வன்பினுடன் திண்ணிய உறைப்பின் றிறமும் ஈண்டு விளங்கக்கிடத்தல் கண்டு கொள்க. அமுதமைப்போம் - அமைப்போமாகிய; அமைக்க ஒருப்பட்டோ மாகியயாம்; வினைப்பெயர். அமைப்போமாகிய யாம் பெறுவ தெவ்வாறு? என்று கூட்டுக; வினைமுற்றாகவே கொண்டு உரைத்தனர் முன் உரைகாரர். என்று வணங்குதலும் - அதுகேட்டு - என்றார் என வரும் பாட்டுடன் முடிக்க. |
|
|