பாடல் எண் :3716

என்று கணவர் கூறுதலுமதனுக் கிசைந்"தெம் பிரான்றொண்டர்
இன்று தாழா தமுதுசெய்யப் பெற்றிங் கவர்த மலர்ந்தமுகம்
நன்று காண்ப"தென நயந்து, "நம்மைக் காக்க வருமணியைச்
சென்று பள்ளி யினிற்கொண்டு வாரு" மென்றார் திருவனையார்.
57
(இ-ள்) என்று கணவர் கூறுதலும்- முன் கூறியவாறு தமது கணவனார் சொல்லுதலும்; அதனுக்கு இசைந்து - அதற்குத் தாமும் உடன்பட்டு; எம்பிரான்......காண்பது என நயந்து - எமது சிவபெருமானார் திருத்தொண்டர் இன்று காலதாமதமின்றி அமுது செய்யப் பெற்று இங்கு அவருடைய மகிழ்ச்சி மலர்ந்த திருமுகத்தை நன்று நாம் காண்பது செய்யத்தக்க கடமையாம் என்று விரும்பி; திருவனையார் - திருவைப் போன்றவராகிய திருவெண்காட்டு நங்கையார்; நம்மை......கொண்டு வாரும் என்றார் - (கணவரை நோக்கி) நம்மைக் காக்க வரும் மணி போன்ற மகனைப் பள்ளியிற் சென்று கொண்டு வாருங்கள் என்றார்.
(வி-ரை) இசைந்து - தாமும் உடன் பட்டு; தாய்தந்தைய ரிருவரும் மனம் ஒருப்பட்டு உவந்து இவ்வரிய வினை செய்தல் வேண்டுமென்றா ராதலின் தாம் உடன்பட்டார் என்க. "அழைப்போம் யாம்" என்று தமது இசைவினைக் கணவனார் எதிர்நோக்கிய குறிப்பும் கண்டாராதலினாலும் "இசைந்து" என்றார்.
மலர்ந்த முகம் நன்று காண்பது - உண்பவர் இனிதுண்டபின் அவரது இன்முகம் காணுமளவே விருந்தின் பயனா மென்பர்; அவ்வாறே இங்கு அமுது செய்யப்பெற்ற அவரது மலர்ந்த முகங் காண்பதே தமது பேறாகக் கருதினார். காண்பதுவே நமது செயத்தக்க கடமை என்பது குறிப்பெச்சம்; பிரிநிலையேகாரம் தொக்கது. இஃது அம்மையார் மனத்திற் கண்ட துணிபு.
நம்மை.....கொண்டு வாரும் - மனத்துணிபினைத் தொடர்ந்த புறநிகழ்ச்சி.
மணி - மணிபோன்ற மகனார்; "உலாத்தருமிந் நடைமணி" (கோவை -385).
நம்மைக் காக்கவரும் - " எனை யிங்குய்ய நீ பயந்தான்" என்ற கருத்தினைத் தொடர்ந்து மனைவியாரையும் உளப்படுத்திக் கூறியது.
காக்க - உய்ய என்றதுபோல அடியார்க் கமுதூட்டும் நியமந் தவறாதிருக்க உதவுதலால் அச்சிவ புண்ணியப் பேற்றுக்குத் துணையாய் வீடுபேறு தரும் சாதனமாதல் குறிப்பு; சரித முற்குறிப்புமாம். நாயனார், கோயிலினின்று நேரே பள்ளிக்குச் சென்று தாமே சீராளரை அழைத்துவராமல் மனைக்கு வந்து அம்மையை வினவியது அவரிசைவு பெறுதற் பொருட்டாம்.
பள்ளியினிற் சென்று - என்க. சென்று பள்ளியினின்றும் என்பதுமாம்.
திருஅணையார் - திரு - முத்தித் திருவுக்கு முதல்வியாகிய ஞானாம்பிகை; இங்குத் தமது இசைவினால் அனைவருக்கும் வீடு தருவதற்கு மூலமாகும் சரித விளைவுக்குறிப்புமாம். திரு - இலக்குமி என்பாருமுண்டு.