பாடல் எண் :3717

காதன் மனையார் தாங்கூறக் கணவ னாருங் காதலனை
ஏத மகலப் பெற்றபே றெல்லா மெய்தி னார்போல
நாதர் தமக்கங் கமுதாக்க நறுமென் குதலை மொழிப்புதல்வன்
ஓத வணைந்த பள்ளியினி லுடன்கொண் டெய்தக் கடிதணைந்தார்.
58
(இ-ள்) காதல்.....கூற - காதலுடைய மனைவியார் முன்கூறியவாறு கூற; கணவனாரும்......போல - கணவனாராகிய சிறுத்தொண்டனாரும் குற்றம் நீங்கப் பெற்ற எல்லாப் பேறும் அப்போதே பெற்றுவிட்டனர் போல (மகிழ்ந்து); நாதர்.....கடிதணைந்தார் - நாதருக்கு அங்குத் திருமு அமுதாக ஆக்குதற்கு நறிய மெல்லிய குதலை மொழி பயிலும் புதல்வர் கல்வி பயில அணைந்த பள்ளியினின்றும் உடன் கூடக் கொண்டு வருதற் பொருட்டு விரைந்து சென்றனர்.
(வி-ரை) காதல் மனையார் - கணவனாரும் - காதலனை - இல்லறத்தின் நிலையில் மிக்க காதல் கொண்ட ஒழுக்கமுடையோர்; மகன்மீதும் மிக்க காதலை உடையோர் என்றது இங்குக் கொண்ட துணிபின் நிகரற்ற அருமை குறித்தற்கு; காதலன் - காதல் - ஊன்றிய - அழுந்திய -காதலுக்குப் பற்றுக்கோடாகிய இருப்பிடமானவன். கணவர் - பங்குடையவர்; மனையார் -"மனையறத்தின் வேர்"; இப்பொருட்கள் எல்லாம் பொருந்த வைத்து இச்செய்கையின் ஏற்றம் அறிவித்தபடி.
ஏதம் அகல - அமுதூட்டும் நியமம் பிழைக்காது.
பேறு எல்லாம் - நியமமும் அதனால் வரும் பயனும் ஆகிய எல்லாம்.
எய்தினார் போல - ஈண்டு அம்மையாரது இசைவுபெறப் பெற்றதனாலே மற்று எல்லாம் பெறுதல் உறுதி என்பார் இறந்த காலத்தாற் கூறினார். அப்போதே அடைந்துவிட்டார் போல எண்ணி.
நறுமென் குதலை மொழிப் புதல்வன் - "திருவாய் நீரின், உண்ணனைந் தமுதமூறி யொழுகிய மழலைத் தீஞ்சொல்" (671); நறுமை - திருவாயின் பால்மாறா மணம்; மென்மை - மெல்லிய குரல். குதலை - மழலை மாறாத இன்மொழி; அவர் பால் இவரது காதல் மிகுதிகொள்ள நின்ற தன்மையும் இச்செயலி னருமையும் புலப்படக் கூறிய குறிப்பு.
பள்ளி - இது வடக்கில் நகர்ப்புறத்தில் அணிமையில் ? நாழிகை யளவில் உள்ள கிராமத்தில் இருந்ததென்பது கர்ணபரம்பரை. அந்நினைவுக் கறிகுறியாக அங்குச் சீராளதேவருக்கு ஒரு சிறு ஆலயமும் வகுத்து, அதில் அவரது அரிய அழகிய குழந்தைத் திருவுருவம் தாபித்து வழிபடப் பெறுகின்றது.
கடிது - ஆர்வத்தின் மனவிரைவுக் கேற்றபடி உடல்வேகமும் ஒன்றித்து நிகழ.