பள்ளி யினிற்சென் றெய்துதலும் பாதச் சதங்கை மணியொலிப்பப் பிள்ளை யோடி வந்தெதிரே தழுவ வெடுத்துப் பியலின்மேற் கொள்ள வணைத்துக் கொண்டுமீண் டில்லம் புகுதக் குலமாதர் வள்ள லார்தம் முன்சென்று மைந்தன் றன்னை யெதிர்வாங்கி, | 59 | (இ-ள்) பள்ளியினில்.....தழுவ - பள்ளியில் போய்ச் சேர்தலும் பாதத்தில் அணிந்த சதங்கை மணிகள் சத்திக்கப் பிள்ளை அவர் எதிரே ஓடி வந்து தழுவிக்கொள்ள; எடுத்து....புகுத - அவரை எடுத்துத் தோளில் மேல் வைத்துப் பொருந்தும்படி அணைத்துக்கொண்டு மீண்டு வந்து தமது திருமனையினுள்ளே (நாயனார்) புகுதவும்; குலமாதர்......வாங்கி - குலமாதராகிய திருவெண்காட்டு நங்கையார் வள்ளலார் சிறுத்தொண்டரின் முன்பு சென்று அம்மைந்தன் றன்னை எதிரில்தாம் வாங்கிக்கொண்டு, (வி-ரை) பாத....தழுவ - ஓடிவந்து தழுவுதல் - இது, வேற்றிடங்களில் தாய் தந்தையர் வரக் கண்டபோது சிறுவர் செய்யும் செயல்; தன்மையணி; பாதச் சலங்கை மணி ஒலிப்ப - ஓடி வருதலால் சலங்கை மணிகள் ஒலித்தன; பாதம் - இங்குச் சரிதப் போக்கிலே ஆசிரியர் அத்திருப்பாதங்களைப் போற்றி வணங்கிக்கொள்ளும் உட்குறிப்பும் கண்டுகொள்க; இது தெய்வக் கவிநயம்; வேறு நிலைகளாற் கூறாது இதுபற்றிக் கூறியது மிக்கருத்து; இவ்வாறு இங்கு ஓடிவந்து தழுவியதுடன் முடிந்த இவ்வோட்டமே, பின்னர்த் திருவருளால் மீள உயிர்பெற்றபோது "பள்ளியினின் றோடி வருவான் போல்வந்த" (3741) ஓட்டமாகத் தொடர்ந்து வரும் தன்மையும் உட்குறிப்பினா லுணர்த்தியவாறும் கண்டு கொள்க. பியல் - தோள்; தோளின்மேல் வைத்து அணைத்துக்கொண்டு மீண்டது திருவமுதாக்குதற்குக் காலம் தாழ்த்தாது விரைந்துகொண்டு சேறும் பொருட்டாம்; அன்றியும் அடியவரது திரு அமுதுக்குரிய பண்டமாதலின் அவ்வுடல் நடந்து வரச் செய்து வருந்தின் உடல் நைந்து தன்மை மாறுமாதலின் அதன் பொருட்டுமாம். "அத்தர் பியன்மே லிருந்து" (தே - பிள்) குலமாதர் - குலநயம் பெரிதும் படைத்த அம்மையார்; குலம் - இல்வாழ்க்கைக்குரிய குணநலங்களும் குறித்தது. வள்ளலார் - செயற்கரிய செய்து வரையாது கொடுக்கும் இத்தன்மை குறிக்க இங்கு இப்பெயராற் கூறினார். முன் சென்று எதிர் வாங்கி - முன் செல்லுதல் - அம்மையாரின் ஆர்வ மிகுதியும் மேலும் காலந்தாழ்த்தலைத் தவிர்க்கும் கருத்துமாம். "முன் வந்து" (3712) என்றவிடத் துரைத்தவை பார்க்க. எதிர் வாங்குதல் - அவர் தருதற்கு முன் தாமே வாங்குதல் குறித்ததும் அக்கருத்து. |
|
|