பாடல் எண் :3720

அச்ச மெய்திக் கறியமுதா மென்னு மதனா லரும்புதல்வன்
உச்சி மோவார்; மார்பின்கண் ணணைத்தே முத்தந் தாமுண்ணார்;

பொச்ச மில்லாத் திருத்தொண்டர் புனிதர் தமக்குக் கறியமைக்க
மெச்சு மனத்தா லடுக்களையின் மேவார்;
வேறு கொண்டணைவார்,
61
(இ-ள்) அச்சம்.......அதனால் - திருத்தொண்டர்க்கு ஆக்கும் அமுதுக்காக உதவும் பண்டம் என்ற அதனால் பயமெய்தி; அரும் புதல்வன்......தாம் உண்ணார் - அரிய புதல்வனை உச்சிமோவார்; மார்பில் அணைத்தே முத்தந் தாம் உண்ணார்; பொச்சமில்லா......மேவார் - குற்றமற்ற திருத்தொண்டராம் நாயனார் புனிதராகிய அடியவருக்குக் கறியாக்குதற்கு விரும்பும் மனத்தாலே அடுக்களையில் மேவாராகி; வேறு கொண்டு அணைவார் - வேறு தனியிடத்திற் கொண்டு சேர்வாராய்,
(வி-ரை) கறியமுதாம் என்னும் அதனால் அச்சம் எய்தி - என்க. அச்சமாவது அரனுக்கும் அடியார்க்கும் ஆக்கும் பொருள்களை எவ்வாற்றானும் தாம் நுகராமைக் காத்தல் வேண்டுமென்ற நியமங்காத்தலான் வரும் பயம். நுகர்தல் மூக்கினால் நுகர்தல், கண்ணால் இச்சைகொண்டு நோக்குதல், அவ்வாற்றாற் பரிசித்தல் என்ற எவ்வாற்றானும் நேரும்; ஆதலால் அந்த எவ்வழியேனும் நுகர்தலின்றிக் காக்க அச்சம் வேண்டுவதாயிற்று; இங்கு அக்காரணத்தால் தமது மகனாரை உச்சி மோத்தல் - மார்போடு அணைத்தல் - முத்த முண்ணுதல் என்ற இவை தானும் செய்தாரிலர் என்பதாம்.
உச்சி மோத்தல் - மார்பில் அணைத்தல் - முத்தம் உண்ணல் - இவை மகப்பெற்றோர் குழவிகளைப் பாராட்டி மகிழ்வுறும் செயல்கள்; முத்த முண்ணல் - முத்தந்தரக்கொண்டு மகிழ்தல்; "முத்தந் தருகவே" என்பது பிள்ளைத் தமிழ் வழக்கு; இங்கு அம்மகனாரைத் தமது மகனார் என்ற நிலையினை மாற்றி அடியார்க்காகக் கறியமுதாம் என எண்ணி விட்டாராதலின் இவ்வாறு மகிழும் முன்னை நிலையும் மாறிற்று; பொச்சம் - குற்றம்; தவறு; பொய்; பொச்சமில்லா என்றது மிக்குறிப்பு. தாம் உச்சி மோந்தும் அணைத்தும் முத்தம் உண்டும் நுகர்ந்தால் கறியமுதாம் அப்பண்டம் எச்சில்படும் என்பது அச்சமெய்தி என்ற கருத்து. வேறு - மற்றோரிடத்தில்:
மெச்சு மனம் - மகிழும் உள்ளம். இல்லா - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.
புனிதர்க்குக் கறியமைக்க - அடுக்களையின் மேவார் - வேறு கொண்டணைவார் - புனிதர் - தூய்மை செய்பவர்; தூயர்; ஆதலின் அவருக்கு அமுது அமைக்கும் இடம் புனிதமாக இருத்தல் வேண்டும். மைந்தனாரைச் செய்யும் அரியவினைகள் அங்குச் செய்யின் புனிதத் தன்மைக்கு இழுக்காகும் என்று அடுக்களையில் அவற்றைச் செய்யாது வேறு தனியிடத்துக் கொண்டனர் என்பதாம். அடுக்களை - அடுதல் - அமுது சமைத்தல் - செய்யும் இடம்.