பாடல் எண் :3721

ஒன்று மனத்தா ரிருவர்களு "முலக ரறியா" ரெனமறைவிற்
சென்று புக்குப் பிள்ளைதனைப் பெற்ற தாயார் செழுங்கலங்கள்
நன்று கழுவிக் கொடுசெல்ல நல்ல மகனை யெடுத்துலகை
வென்ற தாதை யார்
தலையைப் பிடிக்க விரைந்து மெய்த்தாயார்,
62
(இ-ள்) ஒன்றும்....புக்கு - ஒன்றித்த மனமுடைய அவ்விருவர்களும் உலகத்தார்கள் இதன் உண்மைத் தன்மையினை அறியமாட்டார்கள் என்று எண்ணி மறைவாகிய இடத்திற் சென்று புகுந்து; பிள்ளைதனை....செல்ல - பிள்ளையைப் பெற்ற தாயார் திருவெண்காட்டு நங்கையார் செழிய கொள்கலங்களை (பாத்திரங்களை)நன்றாகக் கழுவிக் கொண்டு செல்ல; நல்ல மகனை.....பிடிக்க - நல்ல திருமகனாரை எடுத்து உலகியலை முற்றும் வென்ற தாதையாராகிய நாயனார் தலையைப் பிடித்துக்கொள்ள; விரைந்து மெய்த்தாயர் - மெய்த்தாயாராகிய அம்மையார் விரைந்து;
(வி-ரை) ஒன்றும் மனம் - ஒன்றும் - ஒன்றித்த; ஒன்றாகிய; ஒரு தன்மைப்பட்ட; "ஒன்றி யிருந்து நினைமின்கள்" (தேவா); இருவர் - நாயனாரும் மனைவியாரும்.
உலகர்....புக்கு - இதனை உலகர் பார்க்கில் இதன் உண்மையினை அறியாமையால் பழித்தும் தடுத்தும் பிறவாறு இடையூறு விளைத்தும் செயல் செய்தல் கூடும்.அதனால் காலத்தாழ்வு முதலியனவும் நேர்ந்து அடியார் திருவமுது செய்ய இடையூறாம் என்பது மறைவிற் கொண்டு வினைசெய்யச் சென்றதன் கருத்து, எவ்வாற்றானும் மகனது உடம்பினைத் திருவமுதுக்கு விரைவில் ஆக்க வேண்டுமென்பது ஆர்வம்; பின்னர்ப் பிள்ளை பிழைத்து ஓடிவந்தபோதும் அதற்காக மகிழாது "திருத்தொண்டர் உண்ணப்பெற்றோம் எனும் பொலிவால்" மகிழ்ந்தார் (3741) என்னும் கருத்தினை இங்கு வைத்துக் காண்க.
செழுங் கலங்கள் - இறைச்சி முதலிய வகைகளை ஏற்கத்தக்க நல்ல கொள்கலங்கள்; பாத்திரங்கள்; செம்மை - செம்பொன் - வெண்பொன் முதலிய உயர்ந்த உலோகங்களால் இயலுதல். தூயனவாதல்.
நன்று கழுவி - திருவமுதுக்கு உரிய பண்டங்களை வைக்கும் கலங்கள் நன்கு கழுவித் தூய்மை செய்யப் பட்டிருத்தல் வேண்டும். இன்றேல் மாசுபடிந்தும் களிம்பு முதலிய குற்றங்கள் சேர்ந்தும் திருவமுது பழுதுபட்டு விடத்தன்மையடையும் என்பது மருத்துவநூல் பாகநூல்களின் உண்மைகள்; சரிதம் செல்லும் நிலையில் இவ்வுலகியலின் போதனைகளையும் கூறிச் செல்லுதல் உயர்ந்த கவிமாண்பு. "நீரிற் சேற்றினை யலம்பி யூற்றி" (458), "கறிக ளாய்ந்து புனலிடைக் கழுவத் தக்க புனித பாத்திரத்து" (461) என்பன முதலியவை காண்க.
நல்ல மகனை - நன்மை - இறைவர்க்குத் திருவமுதாக்க உதவும் தன்மையும், பெற்றோர்கள் கொண்ட அடியார்க் கமுதூட்டும் விரதங் குலையாமற் காத்து மேனிலை எய்த உதவும் தன்மையும், ஆளுடைய பிள்ளையார் திருவாக்கில் வந்த பெருந்தன்மையும், பிறவுமாம். "சீராள தெவரெனுந் திருமைந்தர்" (3676); பெற்றோர்க்குப் பேறுதர வரும் மகனே நல்ல மகன் எனப்படுவது உலகியலியல்புமாம். "சீராளன்" (தேவா).
உலகை வென்ற தாதையார் - உலகு - உலகியலிற் றிணிந்த புத்திர வாஞ்சை என்னும் கடத்தற்கரிய காதல்; தசரதன் சரிதம் முதலியவை இங்கு நினைவு கூர்தற் பாலன. "உருநாட்டுஞ் செயல் காமனொழிய" (3660) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "அடியேனுக் கிதுவு மரிதன்று" (3711) எனத் துணிவு கொண்டபோதே அவ்வெற்றி போந்ததாதலின் வென்ற என இறந்த காலத்தாற் கூறினார். அரியவினை முதலிய ஏனைப் பின்னிகழ்ச்சிகள் அதன் பயனாகப் போந்தனவேயாம்.
தலையைப் பிடிக்க -அரிய வினைக்கு முதற்கண் செய்யும் வினை இதுவாம்.
மெய்த்தாயர் - இடுக்கி - பிடிக்க - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக.