இனிய மழலைக் கிண்கிணிக்கா லிரண்டு மடியின் புடையிடுக்கிக் கனிவாய் மைந்தன் கையிரண்டுங் கையாற் பிடிக்கக் காதலனு "நனிநீ டுவகை யுறுகின்றா" ரென்று மகிழ்ந்து நகைசெய்யத் தனிமா மகனைத் தாதையார் கருவி கொண்டு தலையரிவார், | 63 | (இ-ள்) இனிய.....பிடிக்க - இனிய மழலை ஓசைதரும் கிண்கிணியை அணிந்த கால்கள் இரண்டினையும் மடியின் இடையே இடுக்கிக்கொண்டு கனி போன்ற வாயினையுடைய மகனது கைகளிரண்டினையும் கையாற் பிடித்துக்கொள்ள; காதலனும்.......நகை செய்ய - மைந்தனும் தனது பெற்றோர்கள் மிகவும் பெரிய மகிழ்ச்சி யடைகின்றார்கள் என்று மகிழ்ந்து நகைக்க; தனி......அரிவார் - ஒப்பற்ற பெருமையுடைய மகனாரைத் தாதையாராகிய சிறுத்தொண்டர் கருவியினால் தலையினை அரிவாராகி, (வி-ரை) மழலைக் கிங்கிணி - மழலை - மகார்களின் சொற்போல ஒலிக்கும் என்ற பொருளில் வந்தது. மதலை - (கிங்கிணிக்) கால் என்பது பாடமாயின் (மதலை - மகன்) மதலையின் கால் என்க. மதலை - தூண்; தூண்போலக் குலத்தைத் தாங்குதலின் மகனுக்கு வரும்; ஆகுபெயர்; மடியின் புடை இடுக்கி - மடியின் இடையே மகனது இரண்டு கால்களையும் பிறழாமல் இடுக்கிக் கொண்டு; இடுக்குதல் - இருபிடிப்புட்படுத்தி அமிழ்த்திவைத்தல். காதலன் - (காதல் விருப்பம்). ஈண்டு மகன் என்ற பொருளில் வந்தது. கையால் - தமது கையினாலே; காலினை இடுக்குதலும் கைகளிரண்டினையும் பிடித்துக் கொள்ளுதலும், தலையை அரியவினை செய்தற்கண் உடல் பிறழ்ந்து அவ்வினைக்கு இடையூறு விளைக்கா வண்ணம் செய்யும் எச்சரிக்கைத் தொழில்கள். கருவியினா லறுத்தல் செய்யும் மருத்துவர் இவ்வாறு உடல் அசையாமல் முன்னர்ச் செய்துகொள்ளும் எச்சரிக்கைச் செயல்களாதல் காண்க. தனிமாமகன் - "நல்ல மகன்" என முன் கூறியதனைத் தொடர்ந்து, ஈண்டு இந்நிலையின் முடித்துக் கூறியது, இவரை இனிப் பேசும் நிலை, இவர், மேல், உயிர் பெற்றுவரும் நிலையில் அமைதல் குறிக்க; "மாறின்மகவு - மைந்தன்" (3738) என்று இறைவரும், "மைந்தா, செய்யமணியே சீராளா" (3740) என்று பெற்றோரும் "தரமில் வனப்பிற் றனிப்புதல்வன்" (3741) "மகனார்" (3746) என்று ஆசிரியரும் மேற் பாராட்டும் நிலைகள் கண்டுகொள்க. நனி......நகை செய்ய - இது மகனார் உள்ளத்து மகிழ்ந்த கருத்து. இதனால் மகனாரது உள்ளத்தில் தம்மைப் பெற்றோரது முகத்துவகை கண்டு இவர் தம்பால் பேருவகை கொள்கின்றார் என்று தாமும் நகை செய்து மகிழும் அளவு அவர்கள் மனங்கள் மகிழ்ந்தன என்பது குறிப்பு. "தம்மில் மனமுவந்தே" (3710) என்ற நிலை உள்ளபடி விளக்கங் காணப்பெற்ற தென்பது. கருவி - தலை அரியும் வாள் - கத்தி. மகிழ்ச்சி - அகத்தும், நகை - அது காரணமாகப் புறத்தும் நிகழ்வன. அரிவார் - அரிவார் என்று எதிர்கால வினைமுற்றாற் கூறி,மேற், செய்த செயலைத் தாம் எடுத்துச் சொல்லாமலே கருதி யறிந்துகொள்ள வைத்த கவிநயம் கண்டுகொள்க. மேல் அரியவினை செய்தார் - என்றது அதன்மேல் நிகழ்ந்த அறுத்தல், கூறுபடச் சோதித்தல் முதலியவற்றையும் உள்ளடக்கி நின்றது. 1 |
|
|