அறுத்த தலையி னிறைச்சிதிரு வமுதுக் காகா தெனக்கழித்து மறைத்து நீக்கச் சந்தனத்தார் கையிற் கொடுத்து மற்றையுறுப் பிறைச்சி யெல்லாங் கொத்தியறுத் தெலும்பு மூளை திறந்திட்டுக் கறிக்கு வேண்டும் பலகாய மரைத்துக் கூட்டிக் கடிதமைப்பார், | 65 | (இ-ள்) அறுத்த.....கழித்து - கூறுபடுத்தி எடுத்த தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று கழித்து; மறைத்து நீக்க......கொடுத்து - அதனை மறைத்து ஒதுக்கும் பொருட்டுச் சந்தனத்தாரது கையிலே கொடுத்து; மற்றை.....கடிது அமைப்பார் - மற்றை உறுப்புக்களின் இறைச்சி எல்லாவற்றையும் கொத்தியும் அறுத்தும் எலும்பினுள்ளே உள்ள மூளைப்பகுதியைத் திறந்து எடுத்து இட்டும் கறியாக்குதற்கு வேண்டும் பலவாகிய காயவகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் திருவமுது அமைப்பாராகி, (வி-ரை) அறுத்த...கொடுத்து - அரிவார் - (3722) அரியவினை செய்தார் - (3723) என்று அவ்வினையைக் கூறாமற் கூறிய ஆசிரியர், அறுத்த - என்று இறந்தகாலத்தாற் கூறிய நிலையினாலும், அச்செயல் நிகழ்ந்ததனை அறிவித்த மரபும் கவிநயமும் கண்டுகொள்க. தலையிறைச்சி திருவமுதுக் காகாது எனக்கழித்து - இது புலால் உணவின் பொது நியமம் போலும். ஆதலின் அம்மையார் அதனைக் கழித்தனர் என்பது கருதப்படும்; தலையில் உள்ள எலும்புக்கூடும் ஏனைய அவயவங்களின் அமைப்பும் உள்ளீடும் பற்றி இவ்வாறு கொள்வர் என்பது கருதப்படும்; ஆட்டிறைச்சி முதலிய வற்றைக் கொள்வோரும் இறைச்சியுடன் சேர்க்காது தலையினை வேறு ஏகதேசத்திற் கொள்வதும் காணத்தக்கது. ஆனால் ஈண்டு வயிரவ அடியார் "அதுவுங் கூட நாமுண்பது" (3733) என்பது சிறப்பு விதிபோலும், சந்தனத் தாதியம்மையார் இங்குத் தலையிறைச்சி "நினைக்க வருமென்றே, முந்த வமைத்தேன் கறியமுது" (3734) என்று கூறுவதனாலும் சிறு பான்மை சிறப்பு விதியாக அதுவும் உணவு வகையுட் படும் என்பது கருதப்படும். மற்றை உறுப்பு இறைச்சி எல்லாம் கொத்தி அறுத்து எலும்பு மூளை திறந்திட்டு - இதனால் கைகால் மார்பு முதலிய பல உறுப்புக்களிலும் உள்ள இறைச்சித்தசைப் பகுதிகளைச் சேகரிக்கும் தன்மை கூறப்பட்டபடி; கொத்துதல் - தசைபற்றியிருக்கும் எலும்பு முதலிய பற்றுக்களிலிருந்து பிரித்தற் பொருட்டும், அறுத்தல் பின்னர் வேறு படுத்தி எடுத்தற் பொருட்டும் ஆம். "தசைகள் வெவ்வேறம்பினிலீர்ந்து கொண்டு", (766) "மிருகங்கள் கொந்தியயி லலகம்பாற் குட்ட மிட்டுக் கொழுப்பரிந்து" (794) என்பன முதலியவை காண்க. எலும்பு மூளைதிறந்திடுதல் - எலும்புகள் குழாய்கள் போன்றிருக்கும்; அவற்றின் உள்ளே நடுவில் மூளைப்பகுதி உண்டு. அது உணவுக்குரியதாம் என்ப; எலும்பினைத் திறந்து அப்பகுதியினை எடுத்து. "என்பு திறந்து மூளை புல்லும்படி" (988) கறிக்கு வேண்டும் - பலகாயம் - காயம் - இறைச்சிக் கறிக்குக் கூட்டும் பெருங்காயம், சோம்பு, இலவங்கப்பட்டை முதலாகிய வாசனைப் பண்டங்கள் காயம் எனப்படும் என்ப. கடிதமைப்பார் - நாதனடியார் பசியினை விரைவில் தீர்க்கும் ஆவல் குறித்தது; "காலந் தப்பாமே வருவேன்" (3708); "பசியினாலே அழிவுறுமையன்" (460) "இனிய வெம்பிரானார் சாலப் பசிப்ப ரென்றிரங்கி யேங்கி, நனிவிரைந்து" (771), "நாதன்ற னடியாரைப் பசிதீர்ப்பேன்" (1734) என்பன காண்க. அமைப்பார் - அமைப்பாராகிய; முற்றெச்சம்; அமைப்பாராகி - மடவார் - ஏற்றி, இழிச்சித், தாளித்துச், சமைத்து, சமைத்து உரைத்தார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. |
|
|