மட்டு விரிபூங் குழன்மடவா ரடுப்பி லேற்றி மனமகிழ்ந்தே அட்ட கறியின் பதமறிந்தங் கிழிச்சி வேறோ ரருங்கலத்துப் பட்ட நறையாற் றாளித்துப் பலவு மற்றுங் கறிசமைத்துச் சட்ட விரைந்து போனகமுஞ் சமைத்துக் கணவர் தமக்குரைத்தார். | 66 | (இ-ள்) மட்டு......இழிச்சி - மணம் வீசும் கூந்தலினையுடைய அம்மையார் அவற்றை ஒருபாத்திரத்தில் இட்டு அடுப்பில் ஏற்றி மனமகிழ்ந்தே சமைத்த கறியினைப் பக்குவம் தெரிந்து அடுப்பினின்றும் இறக்கிவைத்து; வேறோர்......தாளித்து - வேறு ஓர் அரிய பாத்திரத்தில் உரிய பண்டங்களாலே தாளிதம் செய்து; பலவும் மற்றும் கறிசமைத்து - மேலும் பலவாகிய கறிகளையும் சமைத்து; சட்ட......அமைத்து - செப்பமாக விரைந்து சோற்றினையும் சமைத்து; கணவர் தமக்கு உரைத்தார் - கணவராகிய நாயனாருக்கு அறிவித்தார். (வி-ரை) அம்மையாராது ஆர்வத்துக் கேற்ப இப்பாட்டால் திருவமுது ஆக்கிய வகையெல்லாம் விரைவில் கூறி முடித்த கவிநயம் கண்டுகொள்க. மட்டும் - மணம்; விரி - என்றதனால் இங்கு இயற்கை மணங் குறித்தது. பதம் - கறி அடப்பட்டு உணவுக்குரியதாகிய பக்குவம். இழிச்சி - அடுப்பினின்றும் கீழே இறக்கி. வேறோர்.....தாளித்து - தாளிதம் வேறு கலத்திற் செய்து உணவுடன் கூட்டும் சமையல் முறை குறித்தது. நறையால் - நறுமணப் புகை கமழ; தாளிதம் வறுபடாமை, முறுகுதல், கருகுதல் முதலியன இன்றிப் பதத்தில் மணம் பொருந்தும் நிலை குறித்தது. சட்ட - செப்பமாக. "சட்ட என்பது செப்பப் பொருட்டாயதோர் அகர வீற்றிடைச் சொல்; அது சட்டம் என மரீஇயது" (போதம் - மாபாடியம் - 9 - 2 வெண்பா). மற்றும் கறி பலவும் என்க. இவை பொரிக் கறி முதலிய கூட்டுணவு வகைகள். கணவர் தமக்கு உரைத்தார் - "கணவனார் தம்மை நோக்கிக் கறியமு தான காட்டி" (42); மனைவியார் தமது செயல்கள் முற்றின என்றும், இனி அடியாரை அழைத்துத் திருஅமுது செய்விக்க வேண்டுவன செய்தல் வேண்டுமென்றும் குறித்தபடி. |
|
|