உடைய நாத ரமுதுசெய உரைத்த படியே அமைத்தவதற் கடையு மின்ப முன்னையிலு மார்வம் பெருகிக் களிகூர விடையின் வருவார் தொண்டர்தாம் விரைந்து சென்று மென்மலரின் புடைவண் டறையு மாத்தியின்கீ ழிருந்த புனிதர் முன்சென்றார். | 67 | (இ-ள்) உடையநாதர்.....களிகூர - ஆளுடைய நாதர் திருவமுது செய்வதற்குச் சொன்னபடியே அமைத்ததற்குப் பெற்ற மகிழ்ச்சி முன்னிருந்ததனினும் மிக ஆசை மேன்மேலும் பெருகி ஆனந்தம் மிகவும் அடைந்து; விடையின்........சென்று - இடபத்தின் மேல் வருவாராகிய சிவபெருமான் றிருத்தொண்டராகிய சிறுத்தொண்டர் தாம் விரைவாகப் போய்; மென்மலரின்......சென்றார் - மெல்லிய பூக்களின் பக்கங்களில் வண்டுகள் சத்தித்தற் கிடமாகிய திருவாத்தியின் கீழே வீற்றிருந்தருளிய புனிதராகிய வயிரவரிடம் சென்றனர். (வி-ரை) உடைய நாதர் - அடியாரை ஆண்டவனாகவே கொள்ளும் மரபு பற்றி நாதர் என்றார், இங்கு அப் பாவனை அவ்வாறே பலித்ததும் காண்க; அன்றியும் அடியாரை அமுதூட்டும்போது அவர்களுக்குள்ளே நின்று பரமரே உண்டருளுகின்றார் என்பதும் துணிபு. உரைத்தபடியே - அவர் கூறியபடியே. அமைத்த அதற்கு முன்னையினும்......பெருகி - அவர் உரைத்ததும், தாம் எண்ணியதுமாகிய இன்பத்தினும் அவ்வாறே செயலில் செய்தும் முடித்ததன் பொருட்டு மேலும் பெருகிய இன்பமடைந்து. விடையில் வருவார் தொண்டர் - சிறுத்தொண்டர். வருவார் - வினையாலணையும் பெயர். மென்மலரின்.....ஆத்தி - ஆத்தி மலர்களின் பக்கம் வண்டுகள் அத்தேனை உண்ணும் பொருட்டு அவை மலரும் பருவம் பார்த்துப் பக்கத்தே ஊதி, அவை மலர்தற்குதவி புரிகின்றன என்பது. புனிதர் - இறைச்சி யுண்பது - அதனினும் மனிதர்இறைச்சி உண்பது - அதனினும் ஐந்து வயதுச் சிறுவன் கொலைக்குக் காரணமாவது - அதனினும் அவனைப் பெற்றோரே பிடித்து அரியவினை செய்யும் கொடுமையினை ஏவுவது - என்றின்னோரன்ன புனிதமற்றனவாய்க் காணப்படும் செயல்களைச் செய்யினும் அவர் புனிதத்தன்மைக்கு இழுக்கில்லை; புனிதர் புனிதரே என்பது குறிக்க இங்கு இப்பெயராற் கூறினார். புனிதத்தை விளைப்பவர். |
|
|