பாடல் எண் :3727

அண்ண றிருமுன் பணைந்திறைஞ்சி யன்பர் மொழிவா"ரடியேன்
நண்ணி நீரிங் கமுதுசெய வேண்டு" மென்று நான்பரிவு
பண்ணி னேனாய்ப் பசித்தருளத் தாழ்த்த தெனினும்
பணிசமைத்தேன்பால்

எண்ணம் வாய்ப்ப வெழுந்தருளவேண்டு"மென்றங்கெடுத்துரைப்பார்,
68
(இ-ள்) அண்ணல்......மொழிவார் - இறைவரது திருமுன்பிற் சார்ந்து வணங்கி அன்பராகிய சிறுத்தொண்டர் மொழிவாராய்; "அடியேன்பால்......வேண்டும்" என்று அங்கு எடுத்துரைப்பார் - அடியேனிடத்து எழுந்தருளி நீர் இங்குத் திருவமுது செய்தருள வேண்டுமென்று அடியேன் அன்பு செய்து விரும்பி வேண்டினேனாக, அதன் பொருட்டுத் தேவரீர் பசித்தருளிக் காலந்தாழ்க்க இதுவரைக் காத்திருக்க வேண்டி வந்த தென்றாலும், தேவரீர் பணியின்படி சமைத்தேன்; அடியேனது விருப்பம் நிறைவேறும்படி எழுந்தருள வேண்டும்" என்று கூறி, மேலும் உரைப்பாராகி,
(வி-ரை) பரிவு பண்ணினேனாய் - பரிவு - அன்பு; பரிவு......தாழ்த்தது - உமது பசி தீர்க்க வேண்டு மென்று பரிந்து கொண்டதனால் அதற்கு நீர் இணங்கி நிற்க, அதற்கு மாறாகப் பசியினை அதிகப்படுத்திய செயலேயாய்க் காலம் தாழ்த்தது.
எனினும் - என்றது, காலத்தாழ்வாயினும் காரியம் நிறைவேறியது ஆறுதல் என்பது குறிப்பு.
பணி சமைத்தேன் - பணி - பணித்தபடி; கட்டளையிட்டபடி; அமுதூட்டும் திருப்பணியாக என்ற குறிப்புமாம்.
எண்ணம் வாய்ப்ப - தேவரீரை எவ்வாற்றாலும் திரு அமுதூட்டுதல் வேண்டுமென்ற அடியேனது எண்ணம் நிறைவேறும் பொருட்டு; தேவரீர் எங்களை யாட்கொள்ளச் சங்கற்பித்து எழுந்தருளிய திருவுள்ளக் கருத்துப்படி அருள் எங்களுக்கு வாய்க்கும் பொருட்டு என்ற பிற்சரித விளைவின் உண்மைக் குறிப்புமாம்.
உரைப்பாராகி - இறைஞ்ச - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க; உரைப்பார் - முற்றெச்சம்.