வந்து புகுந்து திருமனையின் மனைவி யார்தா மாதவரை முந்த வெதிர்சென் றடிவணங்கி முழுது மழகு செய்தமனைச் சந்த மலர்மா லைகள் முத்தின் றாம நாற்றித் தவிசடுத்த கந்த மலரா சனங்காட்டிக் கமழ்நீர்க் கரக மெடுத்தேந்த, | 70 | (இ-ள்) வந்து.....திருமனையில் - அவ்வாறு வந்து புகுந்து தமது திருமனையிலே; மனைவியார்தாம்....காட்டி - மனைவியார் தாம் வயிரவ அடியாரை முன்பு வந்து எதிர்கொண்டு சென்று திருவடிகளில் வீழ்ந்து வணங்கி முற்றும் அழகு செய்வித்த அந்த மனையில் மணமுடைய மலர் மாலைகளும் முத்தினாலியன்ற மாலைகளும் தொங்கவைத்து மணமுடைய மலர்கள் பரப்பிய இருக்கையாகிய ஆசனத்தை அமைத்துக் காட்டி (அமரச் செய்து); கமழ் நீர்க் கரகம் எடுத்து ஏந்த - மணம் கமழும் நீர் நிறைந்த கரகத்தினை எடுத்து ஏந்தி நின்று நீர்வார்க்க: (வி-ரை) புகுந்து - மனைவியார் - எடுத்தேந்தத் (3729) தூய நீரால் - விளக்கி - என மேல்வரும் பாட்டுன் முடிக்க. மனைவியார்....காட்டி - என்பன வெல்லாம் இடைப் பிறவரலாய் இடையில் மனைவியார் செய்த செயல்களைக் குறித்தன; இடையில் என்பது நாயனார் - இறைவர் தமைக்கொண்டுவருதலுக்கும், அவர்கழல் நீரால் விளக்குதற்கும் இடையில்; முந்த - அவர் மனையுட் புகுது முன்பு; திருமுன்பு என்றலுமாம். முழுதும் அழகு செய்த மனை - முன்னமே எஞ்ஞான்றும் அழகாக அணி செய்யப்பட்ட மனை; அழகு செய்தல் - ஏனையோர் போலத் தம் பொருட்டன்றி, நாடோறும் அமுதூட்டும் அடியார்களுக் கேற்கும் பொருட்டு. முழுதும் - எல்லாவகையாலும், எல்லாக் காலத்திலும். கந்த மலர்மாலை....நாற்றி - இவை இப்போது வயிரவர் வருகையின் பொருட்டுச் செய்யப்பெற்றன. மணமுடைய பூமாலைகளும் முத்து மாலைகளும் தொங்கவைத்தல் அணிசெய்வகை ; நாற்றி - தொங்க வைத்து. கந்த மலர் அடுத்த தவிசு ஆசனம் காட்டி - என்க. தவிசினை அமர்தற்குரிய ஆசனமாகக் காட்டி; தவிசு - இருக்கை; ஆசனம் காட்டுதல் - ஆசனம் - மூர்த்தி - மூர்த்திமான் என்ற பூசையின் அங்கம் மூன்றனுள் ஆசனங் கற்பித்தல் குறித்தது. சிவபூசை ஆகம விதிகள் பார்க்க. இங்கு மூர்த்தி, வயிரவ அடியார் திருமேனியும், மூர்த்திமான் அவ்அடியார் திருவேடத்தினுள் எழுந்தருளிப் பூசை ஏற்றுக்கொள்ளும் சிவபெருமானுமாகப் பாவிக்கப்படுவர். கரகம் - சிறிய மூக்குள்ள பாத்திரம்; குண்டிகை; சிறிய மூக்கு, நீர், இடையறாது வார்த்தற்குதவுவது. நீர்க்கலம் என்றலுமாம். கமழ் - மலர் - குங்குமப்பூ முதலிய வாசனைப் பண்டங்களிடும் மரபு குறித்தது. எடுத்து - ஏந்த - ஏந்த என்றது ஈண்டு ஏந்தி நீர்வார்க்க என்ற பொருளில் வந்தது. அடியார்களின் அடி விளக்க மனைவியார் நீர்வார்க்கக் கணவனார் அடியார் பாதம் கழுவுதல் பற்றிக் கலிக்கம்ப நாயனார் புராண வரலாறு பார்க்க. ஏந்தி வார்க்க அத்தூய நீரால் - என்று மேற்பாட்டுடன் தொடர்ந்து கூட்டி யுரைத்துக் கொள்க. |
|
|