தூய நீராற் சிறுத்தொண்டர் சோதி யார்தங் கழல்விளக்கி, ஆய புனிதப் புனல்தங்க டலைமே லாரத் தெளித்தின்ப மேய வில்ல மெம்மருங்கும் வீசி விரைமென் மலர்சாந்தம் ஏயுந் தூப தீபங்கண் முதற்பூ சனைசெய் திறைஞ்சுவார், | 71 | (இ-ள்) தூய.....விளக்கி - அவ்வாறு மனைவியார் வார்த்த தூய நீரினால் சிறுத்தொண்டர் சோதியாருடைய திருவடிகளை விளக்கி; ஆய...வீசி - அவ்வாறு விளக்குதலாற் பெறலாகிய தூய தீர்த்தத்தினைத் தங்கள் தலையின்மேல் நிறையத் தெளித்துக் கொண்டு, இன்பம் பொருந்திய மனையின் எப்பக்கத்தினும் வீசி இறைத்து; விரை....செய்து - மணமுடைய மெல்லிய மலர்களால் அருச்சித்துச் சந்தனக் கலவை சாத்திப் பொருந்தியவாறு தூப தீபங் காட்டி, இவை முதலாகிய பூசனை விதிகளை எல்லாம் செய்து; இறைஞ்சுவார் -வணங்குவாராகி, (வி-ரை) கழல் விளக்குதல் - பாத்தியம் எனப்படும் பூசை அங்கம்; ஆய - அவ்வாறு கழல் விளக்கியதனால் ஆகிய - பெறப்பட்ட. ஆர - நிறைய - மனம் அமைதி பெறும் அளவும். இன்பம் மேய இல்லம் - சிவதருமங்களாகிய அடியார் பூசனைக்கும் அரன் பூசைக்கும் பயன்படுவதாயும், அதற்குரிய இல்வாழ்க்கைக்கு இருப்பிடமாயும் நின்றமையால் இன்பம் பொருந்திய மனை என்பதாம்; ஏனையோர் எண்ணுவது போலப் பாசபந்தப் போகப் பொருள்கள் நிறைந்த உலக இன்பங்கள் பொருந்துவது என்பதன்று. இல்லம் எம்மருங்கும் வீசுதல் - மனையெங்கும் நீண்ட நற்பயன் தந்து விளங்கும் பொருட்டு; இவைபற்றி அப்பூதி நாயனார் புராணம் (1802-1803), இளையான்குடி மாறநாயனார் புராணம் (443) முதலியவை பார்க்க. விரை........பூசனை செய்து - இவை பூசை செய்யும்முறை; அருச்சித்தல் - மலர் சாத்தி அலங்கரித்தல், புகைத்தூபம் காட்டுதல், விளக்கேந்துதல் முதலியன. "விதிமுறை தீபமேந்தி" (851) "நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி, நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடும் அடியவர்" (பிள் - நட்டபாடை - திருவிரா - சிவபுரம் 4). விரை - விரை எனப்படும் என்றலுமாம். "முல்லையிரு வாட்சிபிச்சி முகைநெகிழ்மல் லிகைபன்னீர், நல்லமருக் கொழுந்துவெட்டி வேரிவைநற் சுகந்தங்கள், சொல்லுமிவை யோரேழும்" (பேரூர்ப்புரா - மருதவரை. 35). இறைஞ்சுவார் - வணங்கிக் கேட்ப - என வரும்பாட்டுடன் முடிக்க நின்ற முற்றெச்சம். |
|
|