பனிவெண் டிங்கட் சடைவிரித்த பயில்பூங் குஞ்சிப் பயிரவராம் புனிதர் தம்மைப் போனகமுங் கறியும் படைக்கும் படிபொற்பின் வனிதை யாருங் கணவருமுன் வணங்கிக் கேட்ப மற்றவர்தாம் "இனிய வன்ன முடன்கறிக ளெல்லா மொக்கப் படைக்க" வென, | 72 | (இ-ள்) பனி வெண்.....புனிதர் தம்மை - குளிர்ந்த வெண்பிறையினைச் சூடிய சடையினையே குஞ்சியாக ஆக்கி விரித்த அழகிய விளக்கமுடைய பூச்சூடிய தலைமயிரினை உடைய வயிரவராம் தூயபெருமானை; போனகமும்...படி - சோற்றினையும் கறிவகைகளையும் படைக்கும் படியினை; பொற்பின்.......கேட்ப - அழகிய மாதராரும் கணவனாரும் வணங்கிக் (இன்னவாறென்றருள் செய்யவேண்டுமென்று) கேட்க; மற்றவர்தாம்....படைக்க என - மற்று அவர்தாம் இனிய சோறுடனே கறிகளையும் எல்லாவற்றையும் ஒரு சேரவே படைப்பீராக என்று கூற, (வி-ரை) பனி - குளிர்ந்த; பனித்தல் - நடுங்குதல் - அசைதல் - எனக் கொண்டு முனிசாபத்தால் நேர்ந்த குறை நோய்க் கஞ்சி நடுங்கி வந்த என்றலுமாம். "பனி வெண்டிங்கள்" (3744) என மேலும் கூறுதல் காண்க. சரண்புக்க மதியினைத் தலையிற்சூடி உயிரளித்த இவ்வருட் பெருமையினையும் எளிமையினையும் எளிக்கத்தையும் இங்குக் காணக் குறித்தல் கருத்து. சடைவிரித்த பயில்பூங் குஞ்சி - சடையினையே இவ்வாறு மாற்றி விரித்து அழகுபடுத்திய தலைமயிர்; "சடையை வனப்பெய்த....படர்துஞ்சின் கருங்குஞ்சி கொந்தளமாகப் பரப்பி" (3685) என இதனை முன் விரித்தனர்; விரித்தல் - பரப்பியமைத்தல். புனிதர் - "புனிதர் முன்" (3726); "புனிதர் தமக்கு" (3720). படைக்கும்படி - படைக்கின்ற படியினை; திறத்தினை, விதத்தை; படி - இயல்பு - தன்மை; இரண்டனருபு தொக்கது. படி (யினைaக்) - கேட்ப என்க. கேட்ப - அறிவித்தருளும்படி கேட்க - அமுது அமைக்கும் வகையினை அவரே சொல்ல அறித்தாராதலின், படைத்தலிற் பிழை நேராவண்ணம் அதனையும் அவரே சொல்ல அறிந்து அவ்வாறு செய்தல் வேண்டுமென்பது. உலகியலி லிதுவரை காண இயலாத நிலையாதலானும் அறியவேண்டியதாயிற்று. வனிதையார் - அழகுடைய மாதரார்; திருவெண்காட்டு நங்கையார். இனிய அன்னம் - "செஞ்சாலிச் செழும் போனகம்" (3732) என்று மேற் கூறுதல்காண்க. ஒக்க - ஒருசேர. இனிய வண்ணமுடன் - என்பதும் பாடம். |
|
|