பாடல் எண் :3732

பரிசு விளங்கப் பரிகலமுந் திருத்திப் பாவா டையிலேற்றித்
தெரியும் வண்ணஞ் செஞ்சாலிச் செழும்போ னகமுங் கறியமுதும்
வரிசை யினின்முன் படைத்தெடுத்து மன்னும் பரிகலக்கான்மேல்
விரிவெண் டுகிலின் மிசைவைக்க விமலர் பார்த்தங் கருள்செய்வார்,
73
(இ-ள்) பரிசு......ஏற்றி - பண்புவிளங்கும்படி உண்கலத்தை விளக்கி அதனைப் பாவாடையின் மேல் வைத்து; தெரியும்....எடுத்து - அமுதுவகைகள் வெவ்வேறாகத் தெரியும்படி செந்நெல்லரிசியாலாகிய செழுஞ் சோற்றினையும் கறியமுது வகைகளையும் வரிசையாக முன்னே படைத்து அப்பரிகலத்தினை எடுத்து; மன்னும்.....வைக்க - நிலையான முக்காலியின்மேல் விரித்த வெண்மையான ஆடையின்மீது வைக்க; விமலர்......அருள்செய்வார் - விமலராகிய இறைவர் பார்த்து அப்போது அருள் செய்வாராகி,
(வி-ரை) பரிசு விளங்க - இவை பிவை இன்ன இன்ன என்ற தன்மை விளங்கும்படி. விளங்குதல் -அவற்றைச் சுவைக்கு ஏற்றபடி இடையிடை கூட்டி உண்பதற்கு உதவுதல்.
பரிகலம் - உண்கலம்; திருத்துதல் - நன்கு கழுவுதலும் திருந்த அமைத்தலும்.
பாவாடையில் ஏற்றி - பாவாடை - பரவிய - பரப்பிய ஆடையின் (சீலையில்) மேல்வைத்தல்; பரவிய நிலையில் அமைத்தலுமாம்.
முன் - பாவாடையில் ஏற்றுதலின் முன்.
படைத்து -பரிகலத்தில் வரிசையாகப் படைத்து.
பரிகலக் கால் -பரிகலம் வைத்துண்ணும் ஆசனம்; மூன்று காலுடைய ஆசனம். முக்காலியில் ஏற்றி வைத்துண்பது வழக்கு. இஃது இன்றும் மக்களின் சிறப்புக்களுள் வழங்குவது.
பரிகலக்கான் மேல் - விரி வெண்துகிலின் மிசை - பரிகலத்திற் வரிசைபெற முன்வைத்து எடுத்து ஏற்றிஎன்று கூட்டுக. இந்நாளின் நாகரிகம் படைத்தோர் என்போர் நாற்காலியின்மேல் வெண்டுகில் விரித்து அதில் எச்சிற் பரிகலங்களில் உணவுப் பண்டங்களை வைத்து அமைத்துண்ணும் வழக்கு இதன் வழிவழிப் போலியாய் வந்த எச்ச வழக்குப் போலும்.
விமலர் -புனிதர் என்றதற் கேற்ப உரைத்தது நயம்.
அருள் செய்வார் - முற்றெச்சம். அருளிச்செய்வாராகி - என்ன - என வரும்பாட்டுடன் கூட்டி உரைக்க.