பாடல் எண் :3733

"சொன்ன முறையிற் படுத்தபசுத் தொடர்ந்த வுறுப்பெல் லாங்கொண்டு
மன்னு சுவையிற் கறியாக்கி மாண வமைத்தீ ரே?"யென்ன
"அன்ன மனையார் தலையிறைச்சி யமுதுக் காகாதெனக்கழித்தோம்"
என்ன, "வதுவுங் கூடநா முண்ப" தென்றா ரிடர்தீர்ப்பார்.
74
(இ-ள்) சொன்ன முறையில்.....அமைத்தீரே? என்ன - யாம் சொன்ன முறையிலே படுத்த பசுவினது தொடர்ந்த உறுப்புக்கள் எல்லாவற்றினையும் கொண்டு பொருந்தும் சுவைபெறச் சிறப்பாக அமைத்தீர்களோ? என்று வினவ; அன்னம் அனையார்...என்ன - அன்னம் போன்ற அம்மையார் தலையிறைச்சி திருவமுதுக்கு ஆகாது என்று எண்ணி அதனை நீக்கினோம் என்று கூற; இடர் தீர்ப்பார் - அடியார்களின் இடர்களை எல்லாம் தீர்ப்பவராகிய இறைவர்; அதுவும்.....என்றார் - அதனையும் நாம் உண்பது ஆம் என்றருளினார்.
(வி-ரை) சொன்ன முறையிற் படுத்த பசு - சொன்ன - முன் உரைத்த பசுவும், அதனைப் படுத்தலும், படுத்தல் செய்யும் முறையும். (3707 - 3709 - 3710)
தொடர்ந்த உறுப்பெல்லாம் - முடிமுதல் அடிவரை எலும்பினைப் பற்றி நின்ற எல்லா உறுப்புக்களின் இறைச்சி மூளை முதலிய எல்லாம்.
சொன்ன....எல்லாம் - சொன்ன - சொன்ன நிலை என்பாலும், ஆக்கி அமைத்தீரே? - ஆக்கி யமைக்கும் நிலையும் கடமையும் உங்கள்பாலும் நின்றன என்பதாம். உலகுய்ய மறைக ளாகமம் வகுத்தல் இறைவர் கருணைச் செயல்; அவற்றின் வழி நின்று அவரைச் சார்ந்துய்தல் உயிர்களின் கடமைச் செயல் என்ற குறிப்பும்காண்க.
அமைத்தீரே? - ஏகாரம் வினா; அமைத்தீர்களோ? என்க. உலகர் எவர்க்கும் அரியவாறு அமைத்து முடித்தீர்களே! என்று தாம் அறிந்து கொண்ட நிலையினை விளக்கம்படச் சிறப்புக் கூறிய உடன்பாட்டுக் தேற்றேகாரக் குறிப்பும் காண்க.
அன்னம் அனையார் - திருவெண்காட்டு நங்கையார்; இருவரையும் நோக்கி வினா எழுந்ததாயினம், அமுது படைத்தல் வினாவிய பொருளாதலானும், அதனை உரைத்தல் அம்மையார் கடனாதலானும் அவ்விருவருள் அவர் விடை பகர்ந்தனர் என்க.
தலை.....கழித்தோம் - 3724 பார்க்க.
அதுவும் கூட நாம் உண்பது - உம்மை, நீரும் பிறரும் கழித்து ஒதுக்கும் அதுவும் என்று இழிவு சிறப்பும்மை. உண்பது ஆகும் என்க. ஆகும் குறிப்பெச்சம்.
இடர் தீர்ப்பார் - அதனைக் கழித்தமை பற்றி இருவரும் திகைத் தயர நிற்கும் அவ்விடரும் வாராவண்ணம் முன்னமே சந்தனத் தாதியார்பால் நின்று நினைவூட்டி அதனையும் கறியமைத்து வைப்பாராகிய என்றதும் குறிப்பு; இடர் - அடைந்தவர்களின் பிறவி நோய் என்பது உள்ளுறை.