சிந்தை கலங்கிச் சிறுத்தொண்டர் மனையாரோடுந் திகைத்தயரச் சந்த னத்தா ரெனுந்தாதி யார்தா "மந்தத் தலையிறைச்சி வந்த தொண்ட ரமுதுசெயும் பொழுது நினைக்க வருமென்றே முந்த வமைத்தேன் கறியமு"தென்றெடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார். | 75 | (இ-ள்) சிந்தை......திகைத்தயர - மனங் கலங்கிச் சிறுத்தொண்டர் மனைவியாருடனே மயங்கி வருந்த; சந்தனத்தாரெனும் தாதியார் தாம் - சந்தனத்தார் என்கின்ற தாதியார்; அந்த.....கறியமுது என்று - அந்தத் தலையின் இறைச்சியானது அருள் புரிய வந்த திருத்தொண்டர் திருவமுது செய்யும் பொழுது நினைக்க நேரிடும் என்று எண்ணியே (எச்சரிக்கையாக ) முன்னமே அதனைக் கறியமுதாக அமைத்துள்ளேன் என்று சொல்லி; எடுத்துக் கொடுக்க முகமலர்ந்தார் - எடுத்துக் கொடுக்கக் கண்டு முகமலர்ந்து மகிழ்ந்தார்கள். (வி-ரை) சிந்தை.....அயர - வயிரவர் சொல்லிய அரிய வினை அத்தனையும் செய்தும் இக்குறையால் திருவமுதூட்டத் தாழ்க்க நேரும் நிலையை எண்ணிக் கலங்கி மயங்கி வருந்தினர்; திகைத்தல் - இனி யாது செய்வ தென்றறியாது மயங்குதல். சந்தனத்தார்....கொடுக்க - உற்றவிடத் துதவும் ஊன்றுகோல் போலவும், உடுக்கை யிழந்தவன் கை போலவும், வேண்டும்போது அங்கு அந்நேரம் உதவும் நண்பர்களை - ஏவலர்களைப் - பெற்றவர்க்குக் குறைவு வராது; ஏவாமே குறிப்பறிந்தும், தாமாகவும் செய்யும்நிலை தொண்டின் அரிய நிலையாம். திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாறு பார்க்க. "புண்ணியமெய்த் தொண்டர் திருக்குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மை." (1189) தாதியார்....கொடுக்க - இவ்வாறு தொண்டர்க் கேவல் குறிப்பறிந்து செய்த திறத்தாலும், சிறுத்தொண்டனாரும் நங்கையாரும் செய்த சில புண்ணியங்களில் அவர் கீழ் நின்று பணி செய்து புண்ணியப் பேற்றினாலும், "நின்சீ ரடியார் தஞ்சீ ரடியார்க், கடிமைபூண்டு நெடுநாட் பழகி, முடலை யாக்கையொடு புடைபட்டொழுகியவர், காற்றலை யேவலென் னாய்த்தலை யேற்றுக், கண்டது காணி னல்லதொன், றுண்டோ மற்றெனக் குள்ளது பிறிதே" என்று பட்டினத்தடிகள் இந்நிலையினையே விரும்பி வேண்டுவதும் காண்க. ‘தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே" (கோயினான்-38); "தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே" (அரசு - தேவா); "அடியார்க்கு மடியேன்" என்பது முதலிய திருவாக்குக்களின் கருத்தும் காண்க. இப் பெருமைபற்றி யன்றே நாயனாரும் நங்கையாரும் நீடு மகனாரும்பெற்ற அப்பேற்றினையே இத் தாதியாரும் உடனே பெற்று, என்றும் பிரியாதேயிருக்கத் திருக்கயிலைக்கு உடன்செல்லும் பேறு பெற்றனர். இஃது இவ்வுண்மைக்கு இலக்கியமாய் விளங்குதல் காண்க. நானத்தலை யிறைச்சி - என்பதும் பாடம். |
|
|