பாடல் எண் :3735

வாங்கி மகிழ்ந்து படைத்ததற்பின் வணங்குஞ் சிறுத்தொண்டரை
"ஈங்கு நமக்குத் தனியுண்ண வொண்ணா; ‘தீச னடியாரிப்
பாங்கு நின்றார் தமைக்கொணர்வீ’ரென்று பரமர் பணித்தருள நோக்கி
ஏங்கிக் "கெட்டே னமுதுசெய விடையூ றிதுவோ?"வெனநினைவார்,
76
(இ-ள்) வாங்கி....நோக்கி - சந்தனத்தார் கொடுத்த தலையிறைச்சியை வாங்கி மகிழ்ந்து படைத்ததன் பின்னே, வணங்கிநின்ற சிறுத்தொண்டரை நோக்கி; ஈங்கு....பணித்தருள - இப்போது தனித்து உண்ண நமக்கு இயலாது; சிவபெருமானடியார்கள் இப்பக்கத்தில் யாரேனும் இருக்கக் கூடியவர்களை அழைத்து வருவீர் என்று வயிரவர் கட்டளையிட; ஏங்கி....நினைவார் - மனம் வருந்திக், கெட்டேன்!; இவர் திருவமுது செய்வதற்கு இதுவோ இடையூறாய் வருவது? என்று நினைவாராகி,
(வி-ரை) வாங்கி - தாதியார் எடுத்துக் கொடுக்க - வாங்கி என முன்பாட்டுடன் தொடர்ந்து கொள்க. கொடுத்தலும் வாங்குதலும் இடையீடின்றி நிகழ்ந்த இருசெயல்கள்; இவற்றினிடையே முகமலர்வார் என்றது மகிழ்ச்சியினை வைத்து முடித்துக்கூறி இங்குத் தொடர்ந்து அன்பின் செறிவினை உணர்த்தும் கவிநயம்.
படைத்ததன்பின் - அந்தத் தலையிறைச்சிக் கறியமுதினைப் பரிகலத்தினிற் படைத்தபின் என்று வருவித்துரைத்துக் கொள்க.
வணங்கும் - அமுது உண்ணவேண்டும் என்று விண்ணப்பிக்கும் நிலையினை உட்கொண்டு வணங்கும்.
ஈண்டு இவ்வாறு விரித்துக்கொள்ளும் வகையாற் றொகுத்துக் கூறுதல் சிறத்தொண்டரின் மனத்தினுட்கொண்ட அவரை ஊட்டுந் தீவிரம் குறித்தது.
நோக்கி - ஓர் குறிப்பினை உட்கொண்டு ஊன்றிப் பார்த்து என்பது.
தனி உண்ண ஒண்ணாது; ஈசன்....கொணர்வீர் - தனிமையில் உண்ணலாகாது என்பது உலகியல் அறநூல் விதியும் ஆம். உண்ணுங்கால் சிவன் அடியாருடன் உண்ணுதல் வேண்டும் என்பது வேத சிவாகமங்களாகிய பதி புண்ணியப் பெரு நூல்களில் விதி. "கண்ணுதற் கன்பரோடும்" (851) என்றது முதலியவை பார்க்க.
இப்பாங்கு நின்றார்தமை - அணிமையில் உள்ளார் யாரேனும் ஒருவரை என்றது தொண்டரது மனவிளைவினைத் தெரிந்துரைப்பார் போன்று விரைந்து பெறுதற் குறிப்புணர்த்தும் வகையாற் கூறியது. அன்றியும் "எவரேனும் தாமாக" (தேவா - அரசு) என்ற குறிப்புமாம். இப்பாங்கு - நாயனாரையே குறிப்பாலுணர்த்துதலும் காண்க.
ஏங்கி....நினைவார் - அன்று முன்பு தேடியும் காணா தலைந்துள்ளாராதலானும், அப்போது பொழுது மேலும் கழிந்துள்ள நேரமாதலானும் இனிக் கிடைப்பதரிது ஆதலின் இவர் உண்பதும் கூடாதாகிவிடும் என்று நினைந்தமையால் மனத்துள் ஏக்கமும், அதுபற்றிய "கெட்டேன்!" என்று போந்த அவலக் குறிப்பு மொழியும் எழுந்தன. "காத லாலே தேடியுமுன் காணேன்" (3704).
தனியுண்ணாமை - "சாட்சி போசனம்" என்பது வடமொழி வழக்கு.