அகத்தின் புறத்துப் போயருளா லெங்குங் காணா ரழிந்தணைந்து முகத்தில் வாட்ட மிகப்பெருகப் பணிந்து முதல்வர்க் குரைசெய்வார் "இகத்தும் பரத்து மினியாரைக் காணேன்; யானுந் திருநீறு சகத்தி லிடுவார் தமைக்கண்டேயிடுவே" னென்று தாழ்ந்திறைஞ்ச, | 77 | (இ-ள்) அகத்தின்....உரை செய்வார் - மனையின்வெளியே போய்த் தேடியும் திருவருட் செயலால் எங்கும் அடியவரைக் காணாது முகத்திலே மிகவும் வாட்டம் பெருக வந்து முதல்வனாருக்கு உரை செய்வாராய்; இகத்தும்....தாழ்ந்திறைஞ்ச - இகத்தினிலும் பரத்தினிலும் இனியவர்களாகிய சிவனடியார்களைத் தேடியும் கண்டிலேன்; நான் அறியேனாயினும் உலகிலே திருநீறிடுவார்களைப் பார்த்து நானும் திருநீற்றினை இடுவேன் என்று கூறித் தாழ்ந்து வணங்க, (வி-ரை) அகத்தின் புறத்து - அகத்துள்ளே புறம் - என்ற குறிப்புப்படுவது சொன்னயம்; மனத்துள் அடியார் காணப்பெறார் என்று மனமாழ்கினும் அக்கருத்துடனே நின்றுபடாது புறத்துப் போயினார் என்ற குறிப்பும் காண்க. அருளால் - பரமனது ஆணைப்படியே; அருள் - ஆணை - கட்டளை; அருளாற் போய் என்று கூட்டுக; அடியார்கள் காணக்கிடையார் என்று துணிந்துள்ளாராயினும், பரமர் ஏவினபடி செய்தல் வேண்டும் என்ற கடப்பாட்டினாலே சென்றனர் என்பதாம். இவ்வாறே கறியாக்கிய மகன் வருவானென்பது கூடாத காரியமென் றுணர்ந்தும், பின்னர் "அழையும்" (3739) என்ற ஆணைக்குட்பட்டு "அருளாற்" புறம்போய் அழைத்த செயலும் காண்க. அருளாற் - காணார் - என்ற கூட்டி, அன்று முன்னரும், அப்போதும் அடியார் காணாராயினமையும் திருவருளால் நிகழ்ந்தன என்ற குறிப்புப்படக் கூட்டியுரைக்கவும் நின்றது; என்றும் வரத்தக்க அடியார்கள் காணாமையும், கறியாக்கப்பட்டமையால் மீண்டுவரத் தகாத மகன் வரக் காணப்படுவதுவும் ஒக்கவே திருவருளால் நிகழ்ந்தன என்ற அருட்பெருமை உணர நிற்பதும் காண்க. அழிந்து....உரைசெய்வார் - அடியாரை ஊட்டப்பெறாத நிலைபற்றி நேர்ந்த மனவருத்தத்தின் செறிவு. இகத்தும் பரத்தும் இனியார் - சிவனடியார்கள்; குரு லிங்க சங்கமம் என்ற இறைவரது மூவகைத் திருமேனிகளுள்ளே சங்கமத்தி னியல்பும், சிவனடியார்களின் வழிபாட்டால் வரும் உபகாரமும் சுருக்கி வடித்தெடுத்துக் காட்டப்பட்ட நயம் கண்டுகொள்க; இதனை ஈண்டுப் பெரிய சிறுத்தொண்டரது திருவாக்கில் வைத்துணர்த்திய சிறப்பும் தகுதியும் காணத்தக்கது; இகத்து - இனிமையாவது "தன்னுறை வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்து" (போதம் -12 வெண்பா) என்றபடி, காணக்கிடையாத இறைவனைக் காணும்படி காட்டி நிற்றலானும், பரத்தின் இனிமை "தன்னுணரற் தன்னுள் இருத்தலால்" என்றபடி அவர்களது சற்பாவனையான திருவுள்ளக்கிடையாற் பெறும் பயனானும் பெறப்படும். இகத்தும் பரத்தும் - உம்மை எண்ணும்மை. யானும்....இடுவேன் - திருநீறிடுதல் அடியாரிலக்கணம். "நீறிடுவார் அடியார்" (திருமந்.7-159); "எவரேனுந் தாமாக விலாடத் திட்ட திருநீறுஞ் சாதனமுங்கண்டா - லுள்கி" (தேவா - அரசு) என்றபடி அடியேனும் திருநீறிடுவே னாதலால் அடியேனை உடனுண்பதற்கு ஏற்றுக் கொள்ளலாமோ? என்ற குறிப்புடன் விண்ணப்பித்தவாறு; பரமர் பணித்தருளிய ."ஈசன்அடியா"ருள் (3735) ஒருவராகத் தம்மை எண்ணி வைத்துக்கொள்ளச் சிறுத்தொண்டருக்கு மனமிசையாமல், இவ்வாறு தகுதியற்றவனாயினும் திருநீறிடுதலால் அடியாருள் ஒருவராகக் கொள்ளத் தகும் என்று கூறிய எளிமை காண்க. "நீரோ பெரிய சிறுத்தொண்டர்?" (3703) எனக் கேட்டபோது "பூசிசா தனத்தவர்முன் போற்றப் போதே னாயிடினும்" (3704) என்றுரைத்தமை இங்கு நினைவு கூர்தற்பாலது. நாயனாரது திருநீற்றின் அன்பு பற்றிப் "பொடி நுகரும் சிறுத்தொண்டன்" "வெந்தநீ றணி மார்பன் சிறுத்தொண்டன்" என்று ஆளுடைய பிள்ளையார் தாமே கண்டு சிறப்பித்தமையும் காண்க. திருநீறே அடியாராந் தன்மைக்கு அடையாளம் எனக் கொள்வது சைவத்திறத்தில் உயர்ந்தோர் மரபு; மெய்ப்பொருள் நாயனார் - ஏனாதி நாத நாயனார் வரலாறுகள் காண்க. "வெண்டிருநீற் றின்பொலிவு மேற்கண்டேன்; வேறினியென்?, அண்டர்பிரான் சீரடியா ராயினார்"; (645); "திருநீற்று நெறி" என்பனவும் காண்க. யானும் - உம்மை இழிவு சிறப்பு. தாழ்ந்திறைஞ்ச - உடன்உண்ணும் அடியாராய் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று விண்ணப்பிக்கும் குறிப்புடன் வணங்க. அகத்தும் புறத்தும் - என்பதும் பாடம். |
|
|